சென்னை, மார்ச் 29- தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக போக்கு வரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப் படுகிறார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார் என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியிருந்தார். இந்த சர்ச்சையின் எதிரொலியாகவே, அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.