tamilnadu

img

உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி

தேனி, செப். 26 - மூளைச் சாவு ஏற்பட்டு உடல்  உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் த.வடிவேல் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 

அரசு மரியாதை

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் த.வடிவேல் உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிற்குச்  சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடல் உறுப்பு தானம் செய்த த.வடிவேல், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் ஆவார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் தேனி மாவட்ட பொருளாளராகவும் பணியாற்றி வந்தவர். இந்நிலையில், த.வடிவேல் சின்னமனூரை அடுத்துள்ள சீலையம்பட்டி அருகே கடந்த 23-ஆம் தேதி மாடு முட்டியதில்  இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமுற்றார். அவருக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி  அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி  த.வடிவேல் செப்.24-ஆம் தேதி  மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.   இதையடுத்து மனைவி மற்றும் குடும்பத்தினர் த.வடிவேலுவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை  த.வடிவேலுவின் சிறுநீரகம், கல்லீரல், கண் கருவிழி, தோல் ஆகியவை மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ராஜாஜி மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு ஊழியர் சங்கம் அஞ்சலி முன்னதாக, வடிவேல் உடலுக்கு அரசு ஊழியர் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் பேயத்தேவன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் கு .ராமலிங்கம், மாவட்டச்செயலாளர் த.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.