வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்
தஞ்சாவூர், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை இணைந்து நடத்திய வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தகர் கழகத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில வரி துணை அலுவலர்கள் சசிகுமார், ராவுத்தர்ஷா, மகேஸ்வரி, வர்த்தக சங்க முன்னாள் தலைவர்கள் பி.எஸ்.அப்துல்லா, ஆர்.பி. ராஜேந்திரன், முன்னாள் பொருளாளர் சாதிக் அலி மற்றும் வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்
தஞ்சாவூர், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி, டாக்டர் ஜே.ஸி. குமரப்பா பள்ளி சார்பில் நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில், குமரப்பா பள்ளியில் பயிலும் மாணவர்களின் பங்களிப்போடு, பேராவூரணி பகுதியில் உள்ள செருவாவிடுதி உடையார் தெரு, மருதங்காவயல், ஏனாதிகரம்பை மேற்கு, நவக்கொல்லைக்காடு, விளங்குளம் தெற்கு, பாங்கிரான்கொல்லை, சின்ன கள்ளங்காடு ஆகிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 170-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் ஆகிய பொருட்களை குமரப்பா பள்ளி மாணவர்கள் வழங்கினர். இதில், பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பள்ளி முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், சி.பி.எஸ்.இ ஒருங்கிணைப்பாளர் விவேகா, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் பகுதி மக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும்: வருவாய் கோட்டாட்சியர் உறுதி
தஞ்சாவூர், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் காரங்குடா பேருந்து நிறுத்தம் அருகில், வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் செல்ல வழியின்றி, கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலைமை ஏற்பட்டது. இதேபோல், மரக்காவலசை கிராமத்தில், விவசாயிகள் வயலுக்கு செல்லும் சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். புதுத்தெரு பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி, மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளின் கழிவுநீரை மழைநீர் வாய்க்காலில் விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்பு, வட்டாட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தையில், ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஜூலை 15 ஆம் தேதி, கிழக்கு கடற்கரை சாலையில், சேதுபாவாசத்திரம் கடைவீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாவட்ட சிஐடியு மீனவர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக, ஜூலை 17 அன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் சங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அரசுத் தரப்பில், பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மீனவர் சங்கம், விவசாயிகள் சங்கம் தரப்பில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ. கருப்பையா, ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில் குமார், விவசாயிகள் சங்கத் தலைவர் ருக்கூன், அகில் ராம், தாமரைச் செல்வன், கர்த்தர், பெரியண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அனைத்து பிரச்சனை களுக்கும் ஜூலை 30 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தார்