அமெரிக்காவின் வரிவிதிப்பால் பின்னலாடை தொழில் பெரும் பாதிப்பு துரை வைகோ கருத்து
பாபநாசம், ஆக. 28- ம.தி.மு.க முதன்மைச் செயலர் துரை வைகோ பாபநாசத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அரசின் கடந்த கால செயல்பாடுகள், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மக்களிடம் செல்லும்போது, குறிப்பாக சிறப்பான திட்டங்கள், அடித் தட்டு மக்களுக்கான சிறப்பான திட்டங்கள், அதன் மூலமாக மக்களிடம் பெற்ற ஆதரவு மூலம், திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான ஆதரவு பெறும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். தமிழக அரசும், துறை சார்ந்த அமைச்சர்களும், இதற்கு முறையான விளக்கம் கொடுத்து விட்டனர். விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து விட்டனர். இதற்கு முற்று புள்ளி வைத்தாகி விட்டது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 7 லட்சத்து 58 ஆயிரம் கோடி அமெரிக்கா வர்த்தகம் இருப்பதாக கூறப்படுகிறது. வரி விதிப்பால் இந்தியாவிற்கு 4 லட்சம் கோடி பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பின்னலாடை தொழிலைப் பொதுத்த வரையில் மிகப் பெரிய பாதிப்பு. ஒன்றிய அரசு 220 நாடுகளில் ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. 40 நாடுகளை தேர்ந்தெடுத்து பின்னலாடை தொழிலுக்கு தேவையான முயற்சி எடுத்து வருகின்றனர். 40 நாடுகளின் வர்த்தகம் 100 லட்சம் கோடிக்கு மேல். ஏதாவது பின்னடைவு ஏற்பட்டால் கொங்கு மண்டலம் பெரிய பாதிப்பை சந்திக்கும். லட்சக்கணக்கான பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகும். தவறுகள் நிரூபிப்பதற்கு முன்பே குற்றச்சாட்டு அடிப்படையில் 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, முக்கியமான பொறுப்பில் நீடிக்கக் கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை அவர்களது கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளே எதிர்ப்பதாக கேள்வி பட்டேன். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேறாது என்றார்.