tamilnadu

img

தீக்கதிர் வெளிச்சம் திசையெட்டும் பரவட்டும்! - பெ.சண்முகம்

தீக்கதிர்  வெளிச்சம் திசையெட்டும் பரவட்டும்!

வணக்கம் தோழர்களே! தீக்கதிர் நாளேடு நமது வாளும், கேடயமும் ஆகும். நாடு முழுவதும் நமது கட்சி அன்றாடம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நமது கட்சி தோழர்களுக்கும் - மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் தூதுவன்.  கட்சியின் வளர்ச்சியில், கட்சி உறுப்பினர்களைப் போலவே தீக்கதிருக்கும் முக்கியமான பங்கு உண்டு. எனவே, இத்தினசரி பத்திரிகையை தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு பிரதிகளுடைய எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற  உன்னத நோக்கத்தோடு “தீக்கதிர் தீவிர சந்தா சேர்ப்பு” என்பதை ஒரு இயக்கமாக மேற்கொள்வதென்று கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்ததை நீங்கள் அறிவீர்கள். தீர்மானித்த இலக்கை எட்டிய பல இடைக்கமிட்டிகள் தீர்மானங்களை, தீர்மானகரமாக நிறைவேற்றும் வல்லமை படைத்த நமது கட்சி உறுப்பினர்கள், ஜூலை 10 முதல் 20 வரை மாநிலம் முழுவதும் இதுவே பிரதான  பணி என்று செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தியாகும். பல இடைக்கமிட்டிகள் தங்களுக்கு தீர்மானித்த இலக்கை ஒரே நாளில் முடித்து, சாதனை படைத்துள்ள உத்வேகம் அளிக்கும் செய்தியும் வந்துள்ளது. அதே சமயத்தில் சில கமிட்டிகளில் சந்தா சேர்க்கும் பணியில் அவ்வளவு ஆர்வமாக ஈடுபடவில்லை என்ற தகவலும் இருக்கிறது. “நாம் முயன்றால் முடியாதது எதுவுமில்லை” என்பதற்கு கட்சியின் வரலாற்றில் எண்ணிலடங்கா எடுத்துக்காட்டுக்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். மக்களிடம் நமக்கு அமோக ஆதரவு உள்ளது ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப் போல, கடந்த ஏப்ரல் மாதம்   மதுரையில் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டை மாற்றாரும் வியக்கும் வண்ணம் மிக வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். கிளை முதல் மாநிலக்குழு வரை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நாம் எதிர்பார்த்ததை விட மக்கள் நம்  கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை அகில இந்திய மாநாட்டிற் கான நிதி வசூலும் - நிறைவு நாள் பேரணியில் பங்கேற்ற மக்களின் உற்சாகமும் வெளிப்படுத்தியது. மதச்சார்பற்ற மக்களைத் திரட்டுவது அரசியல் கடமை அகில இந்திய மாநாட்டின் முக்கியமான தீர்மானம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது, அதற்கு மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டுவது, இதற்கேற்ப அரசியல், கருத்தியல், அமைப்பு ரீதியான நமது பணிகளை  அதிகப்படுத்துவது என்பது. மேற்கண்ட தீர்மானத்தை செயல் வடிவம் பெறச் செய்வதில் தீக்கதிர் நாளேட்டிற்கு சிறப்புமிக்க பங்கிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் மதச்சார்பின்மை கருத்து  கொண்ட மக்களை மட்டுமல்லாமல் மத நம்பிக்கையுள்ள மக்களையும் திரட்ட வேண்டியது அவசியம். உழைக்கும் வர்க்கத்தின் வழக்குரைஞர் தீக்கதிர் தீக்கதிர் உள்ளூர்ச் செய்தி முதல் உலகச் செய்தி வரை உண்மையின் பேரொளியாக  உழைப்பாளி மக்களின் பக்கம் நின்று சமரசமில்லாமல் செய்தியை வெளியிட்டு வருவது  நாம் அறிந்ததே. நாம் மட்டுமல்ல! மற்றவர்களும் இதை ஏற்பார்கள். புதிய புதிய வழி களில் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அறிவியல், தொழில்  நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. சமூக வலைதளங்கள் இதில் மாபெரும் புரட்சியை  உருவாக்கியிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக நின்று வாதாடும் பத்திரிகை மிகச்சிலவே என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதில் மிக முக்கியமான இடம் “தீக்கதிர்” நாளேட்டிற்கு உண்டு. எனவே, ‘தீக்கதிர்’ நாளிதழை தலையில் தூக்கிக் கொண்டாட வேண்டியது உழைக்கும் மக்களின் கடமையாகும். கட்சி உறுப்பினர்கள் தீக்கதிர் வாங்க வேண்டும் வகுப்புவாதத்திற்கு எதிரான போரில் நமது படையை தயார் செய்யாமல் நாம் வெற்றி பெறுவது சிரமம். எனவே, தீக்கதிர் வாங்குவதை அனைத்து கிளைகளும் உறுதி செய்ய வேண்டும். கட்சி தோழர்கள் அவரவர்களுக்குள்ள அனைத்து வாய்ப்பு களையும் தீக்கதிருக்காக பயன்படுத்த முன்வர வேண்டும். கட்சி உறுப்பினர்களில் வாய்ப்புள்ள அனைத்து தோழர்களும் ஆண்டு சந்தா கட்டாயம் செலுத்த வேண்டும்.  இடதுசாரிகள், முற்போக்காளர்கள், பிற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், நமது நண்பர்கள், வர்த்தகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என பட்டியலிட்டு சந்திக்க வேண்டும். மாநிலக்குழு தீர்மானித்த இலக்கையும் விஞ்சி அனைத்து மாவட்டக்குழுக்களும் அந்தந்த குழு தீர்மானித்த இலக்கை 100 சதவிகிதம் நிறைவேற்றுவது என்ற நிலையை அடைய வேண்டும்.  சந்தா இலக்கை எட்டி சாதனை படைப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு சாதனையாக ஊடக உலகில்  உண்மையின் பேரொளியாய் விளங்கும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி அமையட்டும்.  இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இதற்கான நாட்களாக மிச்சமிருக்கிறது. ஜூலை  15 தோழர் என். சங்கரய்யா அவர்களின் பிறந்தநாள். சந்திக்கும் தோழர்களிடம் எல்லாம் அவர் கேட்ட கேள்வி - தீக்கதிர் வாசித்தீர்களா? என்பது. அறம் சார் அரசியலில் முன்னுதாரணமாக விளங்கிய தோழர் என்.எஸ். அவர்களின் கேள்விக்கு நமது பதில் - வாங்கிவிட்டோம், படித்துவிட்டோம் என்பதாகத்தானே இருக்க முடியும். தோழர்களே, செயலில் காட்டுங்கள். களத்தில் இறங்குவோம். - புரட்சி வாழ்த்துக்கள்