ஊழலுக்கு எதிராக காம்பியாவில் மாபெரும் போராட்டம்
பஞ்சுல்,ஜூலை 31- காம்பியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊழலுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தி யுள்ளனர். சமீபத்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இது அமைந்துள்ளது. “கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களுக்கு எதிரான காம்பியர்கள்” (GALA) என்ற அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அரசு நியாயம் வழங்க வேண்டும், வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டத்தின் போது மக்கள் வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வணிகர்கள், சிவில் உரிமை அமைப்புகள் என பல தரப்பு மக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி யாஹ்யா ஜம்மேவின் 22 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி 2016 இல் தூக்கி எறியப்பட்டது. அதன் பிறகு அவரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சொத்துக்களை விற்பனை செய்து நாட்டின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அந்த சொத்துகள் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு அதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் ஊழல் இது மட்டுமின்றி ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பொறுப்பேற்ற அரசிலும் பல ஊழல் நடந்துள்ளது. ரஷ்ய நிறுவனங்களுக்கும், காம்பியா அரசு அதிகாரிகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய வகையில் போடப்பட்ட எண்ணெய் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றது. இது வரி ஏய்ப்பு குற்றச் சாட்டுகளுக்கு வழிவகுத்தது. ஆனால் அந்நாட்டு அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாசுபட்ட இருமல் மருந்தை குடித்த தன் காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. இன்றுவரை அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நீதியும் இழப்பீடும் கொடுக்கப்பட வில்லை. காம்பியா துறைமுக ஆணையத்தில் 36.36 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட குற்றச்சாட்டிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை. அதே போல கொரோனா தொற்றின் போதும் பெரும் ஊழல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வெளியான அறிக்கைகளுக்குப் பிறகு, 2025 துவக்கத்தில் “கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களுக்கு எதிரான காம்பியர்கள்” என்ற மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கமானது பல மாதங்களாக மக்களிடையே பிரச்சாரம் செய்து அவர்களை அணிதிரட்டி இந்த மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளது. பட்டியலை வெளியிட வேண்டும் இந்த இயக்கமானது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் முழுமையான பட்டியலை வெளிப்படையாக கொடுக்க வேண்டும். அதனை விற்பனை செய்வதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. மேலும் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை முடக்கி வருகின்ற ஒரு பரந்த ஊழல் கலாச்சாரத்தை இவ்வமைப்பு எதிர்த்து வருகிறது என அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் சைபோ தெரிவித்துள்ளார். இத்தகைய ஊழல்களை அம்பலப்படுத்து வதுடன் அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என இவ்வமைப்பு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.