புதுதில்லி, மார்ச் 14- இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னிலும் இருமடங்கு உறுதியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் மார்ச் 12-13 தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: பாஜக, தான் ஆட்சி செய்த உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைத்திடும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மதவெறித் தீயை மூர்க்கமாக விசிறிவிட்டதன் மூலமாகவும், ஊடகங் களைப் பெரிய அளவில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலமாகவும், அளவிடற்கரிய பண பலத்தின் மூலமாகவும் பாஜக உத்தரப்பிரதேச அரசாங்கத்தை, குறைந்த பெரும்பான்மையுடன் தக்க வைக்க முடிந்திருக்கிறது. பஞ்சாப் மக்கள் தாங்கள் காலங்காலமாக வாக்களித்து வந்த காங்கிரஸ் கட்சியையும் அகாலி தளத்தையும் நிராகரித்துவிட்டு, ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். பஞ்சாப் மக்கள் ஒரு தீர்மானகரமான மாற்றத்திற்கு வாக்களித்திருப்பதால், ஆம் ஆத்மி கட்சி, மற்ற கட்சிகளைத் துடைத்தெறிந்து, மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முடிவுகள் வலதுசாரி அரசியலின் ஆதிக்கம் தொடர்வதையே காட்டுகின்றன. அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளும் இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிராகவும், அதன் கொள்கைகளுக்கு எதிராகவும், அதிகரித்து வரும் எதேச்சதிகார மற்றும் பாசிஸ்ட் தாக்குதல் களுக்கு எதிராகவும் நடத்தி வரும் போராட்டங்களை மேலும் இருமடங்கு தீவிரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது.
திரிபுரா பாஜகவின் பாசிஸ்ட் வன்முறைக்குக் கண்டனம்
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வுடனேயே, திரிபுராவில் பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது பாசிஸ்ட் தாக்குதல் களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது, மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் அலுவலகங்கள் மீதும் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் இவ்வாறு காட்டாட்சி அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. பாஜக, கடந்த காலங்களிலும் இதே போன்று காட்டுத்தர்பாரை நடத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊழியர்களை மிரட்டிப் பணிய வைத்திட முயன்று தோல்வியடைந்தது. இந்தமுறையும் அவ்வாறே அது தோல்வியுறும்.
வைப்புநிதி வட்டி குறைப்புக்கு கண்டனம்
தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே, பாஜக ஒன்றிய அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது, அவர்களின் வருங்கால வைப்புநிதி வட்டி விகிதத்தை, சென்ற ஆண்டு 8.5 சதவீதமாக இருந்ததை 8.1 சதவீத மாகக் குறைத்து, கொடூரமான தாக்குதலைத் தொடுத் திருக்கிறது. வேலை இழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், விலைவாசிகள் விண்ணை எட்டியுள்ள நிலையில் இவ்வாறு மக்களின் துன்பதுயரங்கள் பல்கிப் பெருகியுள்ள சூழ்நிலையில் இவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரங்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளதற்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங் களை மேற்கொள்ளுமாறு அனைத்துக் கிளைகளை யும் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக் கிறது.
மேலும் கூர்மையாகும் மதவெறி நடவடிக்கைகள்
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வுடனேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 2022 ஆண்ட றிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மதவெறி நடவடிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்திடும் விதத்தில், “அரசமைப்புச்சட்டம் மற்றும் மதச் சுதந்திரம்” என்ற பெயரில் “நாட்டில் மதவெறி” (religious fanaticism) அதிகரித்திருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அரசு எந்திரத்திற்குள் நுழைவதற்கு விரிவான திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறது. “இத்த கைய அச்சுறுத்தலை முறியடித்திட” “ஸ்தாபன ரீதியாக வலுவான முறையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று, ஆர்எஸ்எஸ் இயக்கம் தன் ஊழியர் களை அறைகூவி அழைத்திருக்கிறது. இது சிறுபான்மையினத்தவருக்கு எதிரான மற்று மொரு நயவஞ்சகமான நடவடிக்கையாகும்.
நாட்டில் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உத்தரவாதங்களை உயர்த்திப்பிடித்திடவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி சிறு பான்மையினருக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்திடவும், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் முக்கியமாக இருக்கக்கூடிய சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி களும் முன்வர வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.
கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு
அரசியல் தலைமைக்குழு, அரசியல் ஸ்தாபன அறிக்கை மீதான விவாதத்தை நடத்தியது. அது வரும் மார்ச் 25-27இல் நடை பெறவுள்ள மத்தியக் குழுக் கூட்டத்தில் அதன் பரிசீலனைக்காக வைக்கப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு, கேரளா வில் கண்ணூரில் 2022 ஏப்ரல் 6-10 தேதிகளில் நடைபெறும்.
(தமிழில்: ச.வீரமணி)