tamilnadu

img

மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை: சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை: சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில்  கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் 

தஞ்சாவூர், ஆக. 21-  தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை பெட்ரோல் பங்க் அருகே, மருத்துவக் கழிவுகளை, அடையாளம் தெரியாத நபர் சாலையோரம் கொட்டியதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. தஞ்சை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம்-அதிராம்பட்டினம் செல்லும் சாலை ஓரங்களில் பல இடங்களில் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன. இதில், சில மூட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், சில மூட்டைகள் எரிக்கப்படாமலும் சுகாதாரக்கேடு உருவாகும் வகையில் உள்ளன. இதன் அருகே கோவிலும் உள்ளது. இங்கே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லும் சாலை ஓரத்தில், பயன்படுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், சிரிஞ்சுகள், ஊசிகள், பஞ்சுகள், ஐவி செட்கள், காலாவதியான மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து, இந்தப் பகுதியில் இதுபோன்ற மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது, இது அதிகரித்துள்ளது. பெருந்தொற்று அச்சம் உள்ள இந்தக் காலத்தில், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாமல், இது போன்ற இடங்களில் சுகாதாரக் கேடு ஏற்படும் விதத்தில் கொட்டுவோர் மீது, கடுமையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். சுகாதாரச் சீர்கேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.