tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி முயற்சியால் லட்சத்தீவிற்கு பதிலாக மதுரையிலேயே தேர்வு எழுதிய மாணவர்

இன்று நடைபெற்ற மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு மதுரை மாணவர் லோகேஷ்வர் விண்ணப்பித்திருந்தார். குறிப்பாக தமிழகத்தில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் சேரும் நோக்கில் இவர்  விண்ணப்பித்திருந்தார். ஆனால் மதுரையைச் சேர்ந்த மாணவர் லோகேஷ்வருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்தது.  பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு பேரதிர்ச்சி. காரணம் தேர்வு மையம் லட்சத் தீவில் ஒதுக்கப்பட்டிருந்தது. அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வேறு வழங்கப்பட்டிருந்தது. செய்வதறியாது தவித்த மாணவரின் தந்தை மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு.வெங்கடேசனை தொடர்பு கொண்டார். இதையடுத்து உடனடியாக சு.வெங்கடேசன் இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதினார். தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்துக்கு சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள் கடுமையாக சாடியிருந்தார்.
இதையடுத்து உடனடியாக தேசிய தேர்வு முகமையின்(NTA)ஒருங்கிணைப்பாளருக்கும், திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் எடுத்த நடவடிக்கை காரணமாக மாணவருக்கு மதுரையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வெழுத நுழைவுச் சீட்டு கிடைத்தது. இதையடுத்து இன்று காலை லோகேஷ்வர் மதுரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதினார். இந்நிலையில் மதுரையிவேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுத்த சு.வெங்கடேசன் எம்.பிக்கு மாணவர் லோகேஷ்வர் நன்றி தெரிவித்தார்.

;