tamilnadu

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.643 வழங்க ஒப்புதல்

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.643 வழங்க ஒப்புதல்

காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை, ஆக.23 - மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5 நாட்களாக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக 10 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்ற நிலையில், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை மதுரை சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கொரோனா நிவாரணத் தொகை, தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், தீபாவளி போனஸ் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் அமைச்சர் தரப்பில் நிறைவேற்றித் தருவதாக கூறிய நிலையில், மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனத்திடம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு நீண்ட நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாநகராட்சி நிர்வாகமும் ஒப்பந்த நிறுவனமும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பின்வரும் விஷயங்களில் ஒப்புதல் அளித்தன: தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.643 முன்தேதியிட்டு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியம் குறைவாக பெறும் பாதாளச் சாக்கடை, பிட்டர் பணியாளர்கள் மற்றும் குடிநீர் பிரிவு ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச சம்பளம் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பண்டிகை கால போனஸ் வழங்கிட ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், அக்டோபர் முதல் தேதியில் ஒப்பந்தம் புதுப்பிக்கும்போது அது நிறைவேற்றப்படும் என்று ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணம் ரூ.20,000 வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த நிறுவனம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது. அதன் அடிப்படையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என்று சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ம. பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.