tamilnadu

img

வாழ்த்துச் செய்தி - மு.க.ஸ்டாலின்,தமிழக முதலமைச்சர்

1963 இல் துவங்கப்பட்ட தீக்கதிர் நாளித ழின் வைர விழாவிற்கு எனது இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “ஊடக உலகில் உண்மையின் பேரொளி” என்ற முழக்கத்துடன் உழைக்கும் வர்க்கத்தினரை அதிகாலையில் தட்டி எழுப்பும் இந்த நாளிதழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளிவரும் கொள்கை முழக்க கையேடு. கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் கொள்கைகளை - சீர்திருத்தக் கருத்துக்களை - சமூக நீதியை வலுப்படுத்தும் புரட்சிகரச் சிந்தனைகளை - மனித உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடும் நாளிதழ்.

எந்தக் குக்கிராமத்தில் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எப்படிப்பட்ட ஆதிக்கச் சக்திகள் - அரசுகள் அடக்குமுறைகளை ஏவினாலும் - அதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் துணிச்சல் கொண்ட பத்திரிகை! தீக்கதிரின் பக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்காகப் போராடும். சமத்துவத்தை நிலைநாட்டுவதைப் பிரதிபலிக்கும். மதச்சார்பின்மையைப் பறை சாற்றும். மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள அரசியல் சட்ட உரிமை களை வென்றெடுக்க குரல் கொடுக்கும் - ஏன், தீண்டாமையை எங்கு கண்டாலும் தீயாய் நிற்கும் தீக்கதிர்! இந்தத் தீக்கதிர் எங்கள் கூட் டணிக் கட்சியின் ஏடு மட்டுமல்ல -  இந்த அரசுக்கு மக்கள் பிரச்ச னைகளைச் சுட்டிக்காட்டி - எங்களை அப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் தூண்டும் உற்ற தோழன். அரசின் செயல்பாடுகளில் பாராட்ட வேண்டியதை வெளிப் படையாகப் பாராட்டியும்- விமர்சிக்க வேண்டியதை எவ்விதத் தயக்கமும் இன்றி விமர்சித்தும் ‘நடுநிலை’ என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழும் தினசரி இதழ் தீக்கதிர்!

அப்படிப்பட்ட சிறப்புமிகுந்த நாளேட்டின் வைரவிழாவை முன்னி ட்டு சிறப்புக் கருத்தரங்கமும், அதற் காக ஒரு மலரும் வெளியிடப்படுவது மிகுந்த பொருத்தமான நிகழ்வு. இன்றைய செய்தியை நாளைய தலைமுறைக்குமான “ஆவணக் காப்பகமாக” ஒவ்வொரு நாளும் அர்ப்பணித்து - ஆக்கப்பூர்வமான கட்டுரைகளுக்கும், அறிவியல் ரீதியான சிந்தனைகள் சிறகடித்துப் பறப்பதற்கும் முழங்கி வரும் தீக்கதிர் நாளிதழ் அனைவரின் கைகளிலும் - குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருப்போரின் கை களில் தவழ வேண்டிய நாளிதழ்! தீக்கதிர் வைரவிழா மட்டுமின்றி, நூற்றாண்டு விழாவினையும் கண்டு, அதனையும் கடந்து நம் மாநிலத்தின் பெருமைகளையும்- நாட்டின் பன்முகத் தன்மையை யும் காப்பாற்றும் மிக முக்கியப் போர்வாளாக என்றும் தொட ரட்டும், இனிதே வெல்லட்டும் என இந்த வைரவிழா தருணத்தில் மீண்டுமொருமுறை  வாழ்த்து கிறேன்.

;