விராலிமலை ஒன்றியத்தில் ஏழை மக்களின் குடிமனைப் பட்டா, நிலப் பிரச்சனை குறித்து எம்.சின்னதுரை எம்எல்ஏ., ஆய்வு
புதுக்கோட்டை, செப். 26- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் நிலவும் ஏழை, எளிய மக்களின் குடிமனைப் பட்டா மற்றும் நிலப்பிரச்ச னைகள் குறித்து, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம்.சின்னதுரை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு வகையான புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். இதற்கான சிறப்புத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். அரசு அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.30 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் பங்கேற்று உரையாற்றுகிறார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் குடிமனைப் பட்டா மற்றும் நிலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த தோடு, போராட்டத்திற்கும் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக விராலிமலை ஒன்றியத்தில் பாக்குடி, விராலிமலை, கொடும்பார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை விதொச மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விச மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, விதொச மாவட்டத் தலைவர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், கி.ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கள ஆய்வு குறித்து சின்னதுரை எம்எல்ஏ கூறுகையில், “விராலிமலை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இதுநாள் வரை குடிமனைப் பட்டா கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் அரசு வழங்கும் இலவச வீடுகளுக்குக்கூட விண்ணப்பிக்க முடியாத சூழலில் உள்ளனர். மேலும், காலம் காலமாக குத்தகை முறையிலும், அரசு புறம்போக்குகளிலும் சாகுபடி செய்து வரும் விவசாயி களுக்கு பட்டா கிடைக்காததால், ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் எந்தவித சலுகை களையும் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துதான் செப்.30 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் தாங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த போது வாகனங்களின் மூலம் பெருந்திரளாகப் பங்கேற்பதாக ஏராளமான விவசாயிகளும், விவசாயத் தொழி லாளர்களும் உறுதியளித்தனர்’’ என்றார்.