tamilnadu

img

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் லோக் ஆயுக்தா உறுப்பினர் வலியுறுத்தல்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்  நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்  லோக் ஆயுக்தா உறுப்பினர் வலியுறுத்தல்

கரூர், செப். 20-  கரூர் அரசு கலைக் கல்லூரியில், மாணவ நுகர்வோர் சங்கத்தின் சார்பாக கல்லூரி முதல்வர் எஸ். சுதா தலைமையில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.  நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலமாக மட்டுமே, நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், நுகர்வோர் உரிமைகளை பாதிக்கும் ஊழல்களை தடுக்கவும் இயலும் என்று கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.  மேலும், அவர் கூறுகையில், “2019 ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அதிக வழக்குகளை விரைவில் விசாரித்து முடித்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இருப்பினும் உற்பத்தியாளர், விற்பனையாளர், மற்றும் சேவை புரிவோரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நுகர்வோரும் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும் வகையில் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவ நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரிகளில் மாணவ நுகர்வோர் சங்கங்கள் திறம்படச் செயல்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மாணவ நுகர்வோர் சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பேரூராட்சிகளிலும், நகரங்களிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பாகவும், நுகர்வோர் உரிமைகள் குறித்தும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் எங்கு எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பலகையை உள்ளாட்சி அமைப்புகள் நிறுவ வேண்டும்’’ என்றும் அவர் வேண்டுகோள் வைத்தார் முன்னதாக, பேராசிரியர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.