உணவு டெலிவரியில் ஸ்விகி, சொமேட்டோவுக்கு மாற்றாக உள்ளூர் சேவை துவக்கம்
கடலூர், செப்.1 - கடலூர் மாவட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி, சொமேட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க கடலூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு செய்து, மாற்று ஏற்பாடாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாரோஸ் (zaaroz) எனப்படும் உணவு டெலிவரி ஆப்பினை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசர உலகில் வீட்டிலிருந்தபடியே உணவுகளைப் பெரும் அளவில் ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வந்தன. பல்வேறு ஓட்டல்களிலும் வீட்டில் இருந்தே ஆப் மூலமாக உணவுகளை புக் செய்தால் அவை வீடுகளுக்கே உடனடி டெலிவரி செய்து வந்தன. இந்த நிலையில் அந்த டெலிவரி நிறுவனங்கள் தற்போது கமிஷன் தொகையை அதிக அளவில் உயர்த்தி யுள்ளதால், பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்று கிடைக்கும்போது 40 விழுக்காடு வரை அதன் விலை அதி கரித்து மக்களுக்கு கிடைக்கிறது. மேலும் உணவகங்களுக்கும் தனது கமிசன் தொகையை இந்த நிறுவனங்கள் உயர்த்தியது. இதனால் உணவகம் நடத்துபவர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் ஸ்விகி மற்றும் சொமேட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் கடலூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெற்ற கூட்டத்தில் ஸ்விகி மற்றும் சொமேட்டோவை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு ஹோட்டல்கள் சங்க தலைவர் ராம்கி நாராயணன் தலைமை தாங்கினார். கடலூர் மாநகர வணிகர் சங்க பேரவை தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரோஸ் உணவு டெலிவரி இருசக்கர வாகன ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாரோஸ் நிறுவன வி.டி.ராம்பிரசாத், ஓட்டல் சங்க செயலாளர் பி.முருகன், பொருளாளர் வி.கே. ஆத்மலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Zaaroz எனப்படும் உணவு டெலிவரி ஆப்பினை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சாரோஸ் உணவு டெலிவரி ஆப் தற்போது தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உணவு டெலிவரி ஆப் மூலம் செய்யும் உணவுக்கு குறைந்த அளவு கமிசன் என்பதால், குறைந்த தொகை மட்டுமே உயர்ந்து காணப்படும், ஹோட்டல் விலையிலேயே உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஓட்டல்களில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு, எந்தவித கமிசன் தொகையும் இல்லாமல் நேரடியாகவும் வந்து காத்திருக்காமல் பெற்றுச் செல்லலாம் என்று சாரோஸ் நிறுவனர் ராம்பிரசாத் தெரிவித்தார்.