tamilnadu

img

வேலை வழங்கக்கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் சாலை மறியல் - கைது

வேலை வழங்கக்கோரி சுமைப்பணி  தொழிலாளர்கள் சாலை மறியல் - கைது

திருச்சிராப்பள்ளி, ஜூலை 17-  திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வேஸ்ட் பேப்பர் குடோனில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்த சுமைப்பணி தொழிலாளர்களுக்குப் பதிலாக வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியதைக் கண்டித்தும், மீண்டும் தங்களுக்கு வேலை வழங்கக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை போராடியும், தொழிலாளர் துறைமூலமாகவும் பெற்று வந்தனர். இந்நிலையில், வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகள் மதுரை உயர் நீதிமன்றம் சென்று, கடந்த 25 ஆண்டுகளாக தங்களிடம் வேலை செய்துவரும் தொழிலாளிகளை மறைத்து, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம் என தொழிற்சங்கத்திற்கு தெரியாமல் ரகசியமாக உத்தரவு பெற்றுள்ளனர். அந்த உத்தரவில் 25 ஆண்டு காலம் அங்கு வேலை செய்யும் 42 தொழிலாளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை. இந்நிலையில், திருச்சி மாநகர காவல்துறை சட்டவிரோதமாக இந்த தொழிலாளி, முதலாளி பிரச்சனையில் உள்ளே நுழைந்து, பீகார் மாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அமர்த்தியுள்ள முதலாளிகளுக்கும், பீகார் தொழிலாளர்களுக்கும், நூற்றுகணக்கான காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.  இந்தச் செயல், தொழிலாளர்கள் மத்தியில் இன மோதலை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். மேலும், தொழிலாளர்கள் கோரிக்கைகள், தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. மேலும் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் தரப்பு ரிட் மனு நிலுவையில் உள்ளது.  இந்நிலையில், முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து லாபமடைய மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் திருச்சி கோட்டை காவல்துறையை கண்டித்து, சிஐடியு அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், புதனன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, கார்த்திகேயன், மணிமாறன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர், பாலக்கரை பகுதிச் செயலாளர், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், தக்காளி மண்டி தலைவர் பாரதி, செயலாளர் சுப்ரமணி, மந்தை சுமைப்பணி சங்கத் தலைவர் ஜி.கே. குமார், தக்காளி கைவண்டி நிர்வாகி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்ட தொழிலாளர்களை, தவிர மற்ற தொழிலாளர்கள் வேலை செய்வதில் காவல்துறை குறுக்கீடு செய்யாது என உறுதி அளித்தனர். இதையடுத்து, வியாழனன்று தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்து வந்த கடைக்குச் சென்றபோது, அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.