தீக்கதிரின் நெல்லைப் பதிப்பு துவக்கப்படுவது கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 1971 தேர்தலின்போது மதுரை தீக்கதிர் அலுவலகம் சென்று தலைவர்களைச் சந்தித்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. அன்று முதல் இன்று வரை அந்த இனிய தொடர்பு தொடர்கிறது. தமிழக ஊடக வரலாறை மட்டுமல்ல, அரசியல் வரலாறையும் தீக்கதிரைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு அதன் பொதுவாழ்விலும், கருத்தியல் வாழ்விலும் கலந்து போயுள்ளது. வேறு எந்த ஊடகத்திலும் வராத உழைப்பாளரின் போராட்டச் செய்திகள், கருத்தரங்க உரைகள் அதி்ல் வந்தது. தேர்தல் காலங்களில் எதிரணியை வீழ்த்த எத்தகைய வாதங்களை எப்படி எடுத்துரைக்க வேண்டும் என்று அது அரசியலாளருக்குச் சொல்லித் தந்தது. அச்சு ஊடகங்களில் இப்போது நவீனம் வந்திருக்கலாம். அதனால் வேகம் பிறந்திருக்கலாம். ஆனால் உண்மை உதித்திருக்கிறதா என்றால் இல்லை. உண்மை என்றால் மெய்ப்பொருள். மெய்யான கருத்தியல் என்பது மார்க்சியமே. அதன் வழி காணும்போதே அரசியல் நடப்புகளின் உட்பொருள் விளங்கும். அந்தப் புரிதலோடு செய்திகளைக் கொடுப்பதும், கருத்துக்களைச் சொல்வதுமே மகத்தான ஊடகப் பணி. அதைச் செய்கிற ஒரே நாளேடு தீக்கதிர்தான். அதனால்தான் “ஊடக உலகில் உண்மை யின் பேரொளி” என்று அது நியாயமான உரிமை கொண்டாடுகிறது. அந்தப் பேரொளி நானாதிசை களிலும் பரவ வேண்டியது காலத்தின் கட்டாயம். காலையில் தீக்கதிர் படிக்காவிட்டால் என்னவோ போலிருக்கும். படித்தால்தான் அது எனக்கு நல்ல நாள். முந்தைய நாளின் அரசியல் சாரத்தை உள்வாங்கிய நாள். இந்த உணர்வு தீக்கதிரின் நீண்டநாள் வாசகர்களின் உணர்வு. இது தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைக்க அவரின் கரங்களில் தீக்கதிரைக் கிடைக்கச் செய்ய வேண்டும். தென்தமிழகத்தில் தீக்கதிர் பரவ திருநெல்வேலி பதிப்பு உதவும். அது பற்றிப்படர என்பது அன்பான வாழ்த்துக்கள்!