tamilnadu

img

சோசலிச சமூகத்தை அமைக்க கியூபாவிடம் இருந்து கற்போம்!

சோசலிச சமூகத்தை அமைக்க கியூபாவிடம் இருந்து கற்போம்!  

கியூபா ஒருமைப்பாடு, பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவில் தலைவர்கள் பேச்சு  

சென்னை, ஆக.13-   “சோசலிச கியூபாவை பாதுகாப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்” என்ற  முழக்கத்தோடு கியூபா ஒருமைப்பாட்டு விழா மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா செவ்வாயன்று (ஆக.12) சென்னையில் நடைபெற்றது. கியூபா ஒருமைப் பாட்டு தேசியக் குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இணைந்து இந்நிகழ்வைநடத்தின.   மாற்று ஊடக மையக்கலைஞர்களின் பறை இசை, நாட்டுப்புறக்கலைகள், காம்ரேட்  கேங்ஸ்டாவின் ராப் பாடல்கள், உமையாள்புரம் சிவராமனின் மிருதங்க இசையோடு நடை பெற்ற இந்நிகழ்வில் தலைவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:  

எங்களில் இருப்பது  உங்களின் வீரியம்  

விழாவிற்கு தலைமை தாங்கிப் பேசிய ஒருமைப்பாட்டுக்குழு மாநிலத் தலைவர்  - திரைக்கலைஞர் ரோகிணி, “கியூபா என்ற  சின்னஞ்சிறிய நாட்டின் தைரியத்தை, சோசலிசக் கொள்கையை கண்டு அமெரிக்கா அஞ்சுகிறது. கியூப மூலப்பொருளை கொண்டு  தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கூட வாங்க மறுத்து அந்நாட்டை ஒடுக்குகின்றனர்.  இதனையும் தாண்டி கியூபா மக்களை படிப்பாளிகளாக்கியது. ராணுவ தளங்களை இடித்து பிடல் கல்விக் கூடங்களை கட்டினார். கல்வி, மருத்துவம் இலவசம். பேரிடர் காலத்தில் கியூபாவிற்கு மருந்துகள் செல்ல தடைசெய்யப்பட்டபோதும், அந்நாடே தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு அனுப்பியது.  மக்களின் ஆலோசனையையும் பெற்று அந்நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் எழுதப் பட்டது. எனவேதான் பல்வேறு தாக்குதல் களுக்குப் பிறகும் கியூபா தலைநிமிர்ந்து நிற்கிறது. கியூபா கற்றுக் கொடுத்த சோச லிசத்திற்கு கைமாறாக பணம் அனுப்புகிறோம்,  உடன் நிற்கிறோம். ஒரு இட்லி கடை வைத்துள்ள  அம்மா 20 ரூபாய் கொடுத்தார். அந்த 20 ரூபாய் கொடுத்த தாயின் உள்ளம் சொல்கிறது இன்னொரு தாய்க்கு துணைநிற்கிறேன் என்று.  அப்படித்தான் நாமும் துணை நிற்கிறோம்.  பிடல் காஸ்ட்ரோ சொன்னார், உலகத்தில் இருக்கும் அனைவரும் பூந்தோட்டத்தின் மலர்கள் என்று. எனவேதான், நமது அன்பு, ஆதரவு, ஒருமைப்பாட்டையும் கியூபாவிற்கு தெரிவிக்கிறோம். எங்களுக்குள் இருப்பது உங்களின் வீரியம்தான்” என்றார்.  

தடையை தாண்டி 60 ஆண்டுகள்  

நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், கியூபாவின் வரலாற்றையும், கடந்தகால கியூபா ஒருமைப்பாட்டு நிகழ்வு களையும் நினைவு கூர்ந்தார்.  உலக மக்கள் தொகையில் .01 விழுக்காட்டைக் கொண்டுள்ளது கியூபா. 100க்கும் மேற்பட்ட தீவுகள் கொண்ட நாடு. வல்ல ரசு நாடுகள் கூட சாதிக்க முடியாத சாதனையை கியூபா படைத்துள்ளது. மனிதவள குறியீட்டில் பல முன்னேறிய நாடுகளை விட முதலிடத்தில் உள்ளது. 100 சதவீதம் கல்வியறிவு பெற்றுள்ள நாடாக உள்ளது.  பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் இலவசமாக தரப்படுகிறது. 150 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு  கூட ஒரு மருத்துவர் இல்லை. 150 நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பி இலவச சேவை செய்கிறது. அமெரிக்க ஏகாதிபத்திய அடக்கு முறை, பொருளாதார தடையை மீறி இதை சாதிக்க சோசலிசம் என்ற தத்துவம்தான் காரணம் என்றார்.  638 முறை சிஐஏ கொலை செய்ய திட்டமிட்ட போதும் அதை முறியடித்து 90 வயது வரை  வாழ்ந்து கியூபாவை வழிநடத்தியவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க தடையால் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான எரிபொருளை கியூபா வால் வாங்க முடியவில்லை. சர்க்கரை ஆலை களில் 10 சதவீதம் தான் உற்பத்தி செய்ய முடிகிறது. எந்த ஒரு நாட்டோடும் கியூபா பொரு ளாதார உறவு கொள்ள முடியாத நிலையை  அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியை நொறுக்கு கிற கியூபாவிற்கு ஆதரவாக நிற்கிறோம் என்றார்.  

சோசலிசம்தான் தீர்வு  

ஆயுதங்களின்றி அமெரிக்காவால் கியூபாவை அழிக்க முடியும். அதனையும் மீறி கியூபா நிமிர்ந்து நிற்கிறது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட போது பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளிடம் உதவி கேட்டார். அமெரிக்கா உதவி செய்யமறுத்ததோடு, எந்த நாடும் உதவி செய்யவிடாமல் தடுத்தது. அதனை சவாலாக ஏற்று காஸ்ட்ரோ பல்லாயிரம் மருத்துவர்களை உருவாக்கினார். உலக நாடு களுக்கு மருத்துவர்களை அனுப்பினார். உலகம் முற்போக்கான திசை வழியைத்தான் நாடும். சோசலிசம் தான் நிரந்தர தீர்வு. அதற்கு  மாற்றான ஒன்று இதுவரை உருவாகவில்லை என்றார்.

 கியூபாவிடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?  

சோசலிச கியூபா மிகக்கடினமான சூழலில் உள்ளது குறித்தும், உளப்பூர்வமான ஆதரவு தெரிவித்தும் சிபிஎம் 24 அகில இந்திய மாநாடு  விரிவான தீர்மானம் நிறைவேற்றி இருப்ப தையும், மேலும் நிதிதிரட்ட வேண்டியதன் அவசி யத்தையும் சுட்டிக்காட்டி பேசிய மூத்த பத்திரி கையாளர் என்.ராம், “1960களில் தொடங்கி அமெரிக்காவின் அனைத்துவிதமான தடை களையும், ஏகாதிபத்தியத்தையும் தைரியமாக, புத்திசாலித்தனமாக சோசலிச கியூபா எதிர்கொண்டு வருகிறது” என்றார்.  “தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஒருங்கி ணைப்பில் 1990களில் 10 ஆயிரம் டன் கோதுமை யுடன் கியூபா சென்றோம். அப்போது பிடல், “10ஆயிரம் டன் ஒருமைப்பாடு” என்று வர்ணித்தார். அன்றைக்கு இருந்த ஒன்றிய அரசும் 10 ஆயிரம் டன் கோதுமை கொடுத்தது. இன்றைக்கு உள்ள ஒன்றிய அரசின் நிலை  என்ன? கியூபா குறித்து ஒன்றிய அரசு பேசி யுள்ளதா? மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கும் என்று இன்றைய ஒன்றிய அரசிடம் எதிர்பார்க்க முடியாது. அமெரிக்கா விதித்துள்ள வரி குறித்தாவது ஒன்றிய அரசு நேரடியாக பேசியுள்ளதா? கியூபாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டாமா?” என்றார்.   

கியூபாவிடம் கற்போம் 

 “மக்களிடத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ணர்வை வளர்க்கவும், சோசலிசத்திற்கு ஆதர வாக தமிழகம் உள்ளதையும், கியூபாவிற்கு பாதுகாப்பு அரணாக உள்ளோம் என்பதை தெரி விக்கவும் இந்நிகழ்வை நடத்துகிறோம். ஒவ்வொரு கட்சி உறுப்பினரிடம் இருந்து  20 ரூபாயும், பொதுமக்களிடம் இருந்தும் வசூ லிக்கப்பட்ட தொகையில் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இனி  வசூலாகும் ஒருமைப்பாட்டு நிதி முழுமை யாக கியூபாவிற்கு அனுப்பப்படும்” என்று நிறை வுரையாற்றிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.  “கியூபப் புரட்சியை, சே, பிடல் காஸ்ட்ரோ வரலாற்றை திரும்பத் திரும்ப படிப்போம். மக்க ளோடு மக்களாக இரண்டறக் கலந்து நின்று  புரட்சியை நடத்த முடியும். சிறு எண்ணிக்கை யை கொண்டே ஆட்சி மற்றும் சமூக மாற்றத்தை  ஏற்படுத்த முடியும் என்ற பாடத்தை கற்போம். மனித குல விடுதலைக்கான சோசலிச சமூ கத்தை அமைக்க பாடம் கற்போம்” என்றும் அவர் கூறினார்.  ஒருமைப்பாட்டுக்குழு மாநில பொதுச் செயலாளர் ஐ.ஆறுமுகநயினார் நன்றி கூறினார்.  இந்நிகழ்வில் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவிற்கான கியூப தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா உள்ளிட்டோர் பேசினர்.

 நூல் வெளியீடு

 பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ஜான் லீ  ஆன்டர்சன் எழுதி, ஜெ.தீபலட்சுமி மொழி பெயர்த்த ‘பிடல்காஸ்ட்ரோ’, இ.பா.சிந்தன் எழுதிய ‘நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்’, எம்.கண்ணன் எழுதிய ‘சோசலிச கனவின் தேடல் - கியூபா பயண அனுபவம்’ ஆகிய நூல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி வெளியிட சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி ஆகியோர் பெற்றுக்  கொண்டனர்.