tamilnadu

img

சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!

சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!

பெ.சண்முகம், மாநில செயலாளர், சிபிஐ(எம்)

“கியூபா” என்ற சொல்லைக் கேட்டாலே உள்ளத்தில் குதூகலம் பிறக்கிறது. அதற்கு காரணம் பிடல் - சே என்ற இரட்டைப் புரட்சி யாளர்களின் தனித்துவமான செயல்கள். இரண்டாவது, சின்னஞ்சிறிய கியூபா உலகின் முன்னணி ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவை எதிர்த்து நிற்பது.  இதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திய பிடல் காஸ்ட்ரோ 1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். நன்கு கல்வி கற்றவர். வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். 1953 ஜூலை 26, 165 பேர் கொண்ட போராளிகளுடன் சென்று மான்கடா படை முகாமின் மீது தாக்குதல் தொடுத்தவர். இது “ஜூலை 26 இயக்கம்” என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து காஸ்ட்ரோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை, சித்ரவதை, கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகினர். 1953 செப்டம்பர் 21 முதல் சாண்டியாகோ நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம்; ஆற்றிய உரையின் இறுதியாக அவர் இப்படி முடித்தார்: “வரலாறு என்னை விடுதலை செய்யும்”.  நாளை நூற்றாண்டுத் துவக்கம் இது உலகின் கவனத்தை ஈர்த்த உரையாக இன்றுவரை இருந்து வருகிறது.  2025 ஆகஸ்ட் 13 அன்று மாபெரும் புரட்சித் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு துவங்குகிறது. இறந்த பின்னும் வாழ்கிறார் பிடல். உலகம் முழுவதும்உள்ள கம்யூனிஸ்ட்டுகள், சோசலிஸ்டுகள், முற்போக்காளர்கள் இவரது நூற்றாண்டை கொண்டாடுவதன் மூலம் கியூபாவுக்கு உலக நாடுகளின் ஆதரவை வெளிப்படுத்துவற்கான ஒரு வாய்ப்பாகவும், பொருளாதார ரீதியாக  கியூபாவை பாதுகாப்பதற்கான நல்வாய்ப்பாக வும் பயன்படுத்திக் கொள்கிறோம். அதன் ஒரு  பகுதியாக 2025 ஆகஸ்ட் 12 (நாளை) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கியூபா ஒரு மைப்பாட்டுக்குழு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு திட்ட மிடப்பட்டுள்ளது. அன்றைய நிகழ்ச்சியில் தமிழ் நாடு முழுவதும் உழைப்பாளி மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி கியூபாவுக்கு வழங்கப்பட இருக் கிறது. கியூபாவில் சர்வாதிகார பாடிஸ்டா ஆட்சியை கொரில்லா யுத்தம் மூலம் தூக்கியெறிந்து 1958 டிசம்பரில் புரட்சி வெற்றியடைந்தது. இத னைத் தொடர்ந்து ஹவானாவில் பல லட்சம் மக்க ளிடையே பேசினார் பிடல்: “அதிகாரத்தை பிடிப்பதில் தான் நமது புரட்சி வென்றிருக்கிறது. புரட்சிகரப் பணிகள் சமூகப் பொருளாதார மாற்றத்துக்காக இனிமேல் தொடங்க இருக்கின்றன. அந்தப் பணி ஓரிரு நாட்களில் முடியப் போவது இல்லை. அது மட்டுமல்ல! போராடும் போது துணிச்சலும், சாவுக்கு அஞ்சா நெஞ்சமும் வேண்டும். சுடு வதில் யார் முந்திக் கொள்கிறோமோ அவர்கள் வெற்றியும் பெறலாம். ஆனால், சமூக மாற்றம் அதுபோன்றது அல்ல! இங்கு மக்களுடைய, தொழிலாளர்களுடைய, மாணவர்களுடைய ஒத்துழைப்பு தேவை. ஏகாதிபத்தியம் நம் புரட்சி வெற்றிபெறுவதை விரும்பாது; அதன் தாக்குதல் இனிதான் மூர்க்கத்தனமாக இருக்கும்”.  பிடல் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்ப தற்கு இந்த உரை மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மகத்தான சாதனைகள்

அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து  அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்யா மல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்த போதும் கியூபா தனது நெஞ்சுரத்துடன் பொருளாதார ஒடுக்குமுறையை விரட்டியுள்ளது. கியூபா கடந்த 65 ஆண்டு காலத்தில் மாபெரும் சாதனை களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. புரட்சி நடை பெற்று முடிந்த போது அந்நாட்டில் கல்வி கற்ற வர்கள் 30 சதவிகிதம் தான். ஆனால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 100 சதவிகிதம் கல்வி பெற்ற வர்கள் என்ற இலக்கை எட்டியது. அனைவருக் கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், அனை வருக்கும் வீடு, முதியோருக்கு சிறந்த வாழ்க்கையை  உத்தரவாதப்படுத்தியுள்ளது.  100 பேருக்கு ஒரு மருத்துவர் என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று. மருத்துவம் முற்றிலும் இல வசம் என்பது மட்டுமல்லாமல், தொற்று நோய்,  மனித குலத்தை பெருமளவு பாதிக்கும் கொ ரோனா போன்ற நோய்த் தாக்குதல்கள் நடை பெறும் போதெல்லாம் தனது நாட்டு மருத்துவர் குழுக்களை தனது சொந்த செலவிலேயே அனுப்பி ஆண்டுக் கணக்கில் தங்கி மனித உயிர் களைக் காப்பாற்றும் மகத்தான சேவையை செய்து வருகிறது. இது கியூபாவின் மனித நேயத்திற்கு சிறந்த எடுக்காட்டு. மக்கள் நலனில்  அக்கறை கொண்ட இந்த அரசைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

மக்கள் பங்கேற்பு ஜனநாயகம்

ஒன்றரைக் கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு தான் கியூபா. அது உலகப் பெரும் வல்லரசைக் கண்டு அஞ்சாமல், அடி பணியாமல், நிமிர்ந்து நடைபோடுவது அனைவரையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத் திருக்கிறது. அதிலும் சோவியத் யூனியன் வீழ்ச்சி யடைந்து பல சோசலிச நாடுகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்ட பிறகும் கியூபா நிமிர்ந்து நீடித்து  நிற்கிறது. குறிப்பிடப்பட வேண்டிய மற் றொன்று அங்குள்ள அரசியலமைப்பு முறை.  அங்கே இருப்பது மக்கள் பங்கேற்பு ஜனநாய கம். அதாவது, மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் அவரே எல்லாவற்றையும் பார்த்துக்  கொள்வார் என்கிற இந்திய அரசியலைப் போல்  அல்லாமல் மக்களுடன் இணைந்தும், மக்களின்  கண்காணிப்பிலும் தான் மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற முடியும். கியூபாவில் லஞ்சம், ஊழல் என்பதெல்லாம் இருக்கவே முடியாததற்கு இது வும் ஒரு காரணம்.

மனங்களில் குடியேறிய  மகத்தான மனிதர்

தோழர் பிடல் வானொலி மற்றும் தொலைக் காட்சியில் தோன்றி பல மணி நேரம் உரை யாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் உரையாற்றுகிறார் என்று சொன்னால் தெருக்கள் வெறிச்சோடி கிடக்குமாம். வாகனப் போக்குவரத்தே இருக்காதாம். எப்படி ஒரு மனிதர் சுமார் 50 ஆண்டு காலமாக மணிக்கணக்காக பேசுவதை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர் தலைவர் மட்டுமல்ல, மக்களின் மனங்க ளில் குடியேறிய மகத்தான மனிதராக விளங்கிய  காரணத்தால் தான் இந்த வரலாற்று சாத னையை நிகழ்த்த முடிந்தது. அவர் மக்களுக் காக வாழ்ந்தார். அதனால் தான் மறைந்த பிறகும் என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார். மாவீரன் சேகுவேராவின் பங்கு கியூபாவின் விடுதலையிலும், முன்னேற்றத்திலும் முத்திரை பதிக்கத்தக்கது. சேகுவேரா சர்வதேச மனிதர் என்பதை வாழ்விலும், போராட்டத்திலும், மர ணத்திலும் நிரூபித்து விட்டவர். பொலிவியாவில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிடல் வழியில் முன்னேறுவோம்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு நாடு களையும் தனக்கு அடிபணியச் செய்யும் வகை யில் பல அதிரடியான தாக்குதலை தொடுத்துக் கொண்டுள்ளார். ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக் கூடாது என்ற அவரது பேச்சைக் கேட்க வில்லை என்பதற்காக  இந்தியா மீது 25 சத விகித வரியை அபராதமாக விதித்துள்ளார். ஆனால், அமெரிக்காவின் அடாவடித்தனமான இந்த செயலை எதிர்த்து முனு முனுக்கக் கூட பிர தமர் மோடி தயாராக இல்லை. இந்த நிலையை  மாற்றவில்லை என்றால் இந்தியா அமெரிக்கா வின் கைப்பாவையாக மாறும் அவலநிலை ஏற்படும். வளரும் நாடுகளுக்கும், சோசலிச நாடு களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதி மிக்க தொடர்ச்சியான போராட்டத்தை தோழர் பிடல் காஸ்ட்ரோ வழியில் தொடர்வோம்.  சோசலிசமே வெல்லும். முதலாளித்துவம் வீழும்.  கியூப புரட்சி ஓங்குக!