tamilnadu

img

சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு

சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு

தஞ்சாவூர், ஆக. 22-   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையிலான, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து, துறை அலுவலர்களுடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன் (கும்பகோணம்), துரை.சந்திரசேகரன் (திருவையாறு), முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்), மு.பெ.கிரி (செங்கம்), ம.சிந்தனைச் செல்வன் (காட்டுமன்னார் கோவில்), வி.பி.நாகைமாலி (கீழ்வேளூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), அரசு முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் மற்றும் குழு அலுவலர் ம. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும், நீலகிரி தெற்குத்தோட்டம் கிராமத்தில் வட்டக் கிடங்கையும், பிள்ளையார்ப்பட்டி சேமிப்புக் கிடங்கையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் இயங்கும் திருமலைச்சமுத்திரம் 110/33 துணை மின் நிலையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் மருந்தகத்தினை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, எந்த வேளையில் மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோயாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், முத்துவீரகண்டியன்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி குறித்தும் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது’’ என்றார்.