tamilnadu

img

‘தமிழ்வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு இடதுசாரி கருத்தியல் வலுப்பெறுவதை காட்டுகிறது’

சென்னை, ஜன. 27 - இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்கா ளர்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது இடதுசாரி கருத்தியல் தேசிய அளவிலும் தமிழகத்திலும் வலுப்பெற்று வருவதை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் ‘சிங்காரவேலர் விருது’க்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம், ‘உமறுப்புலவர் விருது’க்கு நா.மம்மதுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு விருதாளர்களுக்கான பாராட்டு நிகழ்வு வியாழனன்று (ஜன.27) மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் நடைபெற்றது. விருதாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்ட வர்களில் கணிசமானோர் இடதுசாரி சிந்தனை யாளர்களாகவும், இடதுசாரி இயக்கத்தோடு தொடர்புடையவர்களாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தியல் ரீதியாக உரையாற்றக்கூடிய மதுக்கூர் ராமலிங்கத் திற்கு விருது வழங்கி இருப்பது பெருமை சேர்ப்ப தாக உள்ளது. தமுஎகச-வுடன் இணைந்தும் பணியாற்றும் தமிழ் இசை ஆய்வாளர் மம்மதுவுக்கு உமறுப்புல வர் விருது அறிவித்திருப்பதும் மகிழ்ச்சியாக உள் ளது. பிற விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விருதாளர்களும் இடதுசாரி இயக்கத்தோடு நட்பு ரீதியாக உள்ளவர்கள். இடதுசாரி கருத்தியல் தேசிய அளவிலும், தமிழகத்திலும் வலுப்பெற்று வரு வதை இந்த விருதுகள் அறிவிப்பின் வாயிலாக அறிய முடிகிறது. விருதாளர்கள் தங்கள் பணியினை மேலும் சிறப்பாக செய்ய இந்த விருது ஊக்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். ஏற்புரையாற்றிய இசையறிஞர் நா.மம்மது, “தமுஎகச மதுரை நரிமேடு கிளை உறுப்பினராக உள்ளேன். இந்த முறை சரியானவர்களை விருதாளர் களாக தேர்வு செய்துள்ளனர். முத லமைச்சர், திறமையான அதிகாரிகளை வைத்து  விருதாளர்களை தேர்வு செய்துள்ளார். விருதாளர்களில் அநேகமானோர் இயல் தமிழை சேர்ந்தவர்களாக உள்ள னர். மன்னர்கள் அருகில் இருந்த பாண னையும், விரலியையும் விரட்டிவிட்டு ‘புலமை’ கொண்டவர்கள் மட்டும் ஆக்கிரமித்துக் கொண்டனர். அதை உடைப்பதுபோல் இசைத் தமிழுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று நாடகத்திற்கும் விருது வழங்க வேண்டும். பெரியாரிய இயக்கங்களுக்கும் பொதுவுடமை இயக்கங்களுக்கும் கடந்த காலத்தில் வேறுபாடுகள் இருந்தன. காலத்தின் தேவை, தற்போது இரு இயக்கங்களுக்கும் இணைந்து  பயணிக்க வேண்டி உள்ளது. பகுத்தறிவு வாதி பொதுவுடமைவாதியாகவும், பொதுவுடமைவாதி பகுத்தறிவுவாதி யாகவும்தான் இருக்க முடியும். எனவே, இரு இயக்கங்களும் இணைந்து பயணிக்க வேண்டும்” என்றார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் எம். என். எஸ். வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஐ.வி.நாகராஜன், சி.கல்யாணசுந்தரம், எஸ்.பி.ராஜேந்திரன், எம்.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;