ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி
புதுதில்லி, ஆக. 11 - நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவையிலிருந்து வியாழக்கிழமையன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்று, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வியாழனன்று பேசினார். அப்போது, “நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்று மட்டுமே கூறினோம். மன்னன் திருதராஷ்டிரன் பார்வையற்று அமர்ந்திருந்த போது, திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும் (பிரதமர் மோடி) பார்வையற்று அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார். இதையடுத்து,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பேசும்போதும், அவையில் நடக்கும் விவாதத்தின்போதும் இடையூறு விளைவிப்பதாகக் கூறி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக, நாடாளுமன்ற விவ காரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இடைநீக்கத் தீர்மானம் கொண்டுவந்தார். அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தன்மீதான இடைநீக்க நடவடிக்கை குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் பிரதமர் மோடியை அவமதிக்கவில்லை. மோடிஜி எல்லா விஷயங்களிலும் பேசுகிறார், ஆனால் அவர் மணிப்பூர் விவகாரத்தில் மட்டும் ‘நிரவ்’, அதாவது அமைதியாக அமர்ந்திருக்கிறார் என்றே கூறினேன். என் நோக்கம் பிரதமர் மோடியை அவமதிப்பது அல்ல. நான் பயன்படுத்திய வார்த்தைகளால் பிரதமர் மோடியும் அவமதிக்கப்பட்டதாக உணரவில்லை, அவரது அமைச்சர்கள்தான் அவ்வாறு தவறாக வார்த்தையை திரித்து எனக்கு எதிராக சஸ்பெண்ட் என்ற விவகாரத்தை முன்னெடுத்து, அது சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, தற்போது நான் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, நாள்தோறும் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியை அவமதிக் கிறார்; அவையும் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன என சுட்டிக்காட்டிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நான் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன், ஆனால் எல்லாமே பதிவு செய்யப்பட்டுள்ளன, பிரதமர் மோடியை அவ மதிக்கும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்பதை நாட்டின் குடிமக்கள் அறிந்து கொள்வார்கள்” என்றுகுறிப்பிட்டுள்ளார்.