கரூர் கூட்ட நெரிசல் விசாரணைக் குழுவில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்
கரூர், அக்.5 - கரூரில் கடந்த செப். 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர். இந்த சூழ்நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறி முறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லி வாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தர விட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு வசம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான இந்தக் குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். இப்போது தடயவியல் துறை அதிகாரிகள், 3 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 அதிகாரி கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.