விருத்தாசலம் கல்லூரி மாணவர் மர்ம மரண வழக்கு விசாரணையை துரிதப்படுத்துக சிபிசிஐடி காவல்துறைக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
கடலூர், ஆக.22- விருத்தாசலம் கல்லூரி மாணவர் ஜெயசூர்யா மர்ம மரண வழக்கை சிபி சிஐடி போலீசார் துரிதப் படுத்தி உண்மையை கண்டு பிடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசி யல் தலை மைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கல்லூரி மாணவர் ஆணவக் கொள்கையை சாலை விபத்தாக சித்தரிக்கும் நட வடிக்கையை கண்டித்தும், ஆணவ படுகொலை செய்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்த கோரியும், தமிழக அரசு, ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வலி யுறுத்தியும் சிபிஎம் சார்பில் வெள்ளிக்கிழமை (ஆக.22) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருத்தாசலம் பாலக் கரை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன், வட்டச் செயலாளர் கே.எம்.குமர குரு, திட்டக்குடி வட்டச் செயலாளர் ஏ.அன்பழகன், நெய்வேலி செயலாளர் ஆர்.பாலமுருகன், திருமுட்டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.தினேஷ் பாபு, குறிஞ்சிப்பாடி செயலாளர் எம்.பி.தண்டபாணி, வடலூர் செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் உரை யாற்றினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மூத்த தலைவர் டி. ஆறு முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பை யன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத், எஸ்.பிரகாஷ், பழ.வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.கே.சரவணன், வி.மேரி, பி.மாதவி, பி.முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். செய்தியாளர் சந்திப்பு பிறகு செய்தியாளர் களை சந்தித்த பால கிருஷ்ணன் கூறியதாவது: "விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த ஜெயசூர்யா என்ற மாணவன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந் தார். கடலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வரும் போது விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் நிறைய சந்தேகங்கள் உள்ளது. விபத்து நடந்ததை பார்க்கும் போது, விபத்து நடந்த மாதிரி தெரிய வில்லை. அவர் ஓட்டி வந்த வாகனம் சிறு சேதாரம் கூட ஆக வில்லை. உடன் வந்த இரண்டு பேருக்கும் சிறு காயம் கூட ஆகவில்லை. ஜெயசூர்யாவை தாக்கி படுகொலை செய்ததற்கான முகாந்திரம் இருப்ப தாகத்தான் அவருடைய பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து நடந்த பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலை யத்திலிருந்து பெற்றோ ருக்கு தகவல் கொடுக்கா மல், உடலை கடலூர் கொண்டு சென்று பெற்றோர் களுக்கு கூட அவருடைய உடலை காட்டாமலும் அவர்களுடைய சம்மதமே இல்லாமலும் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். ஜெயசூர்யாவின் பெற்றோர்கள் சார்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சிபிசி ஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. உடனடி யாக சிபிசிஐடி போலீசார் விசாரணை துரிதப்படுத்தி அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உண்மையை மூடி மறைக்க கூடாது உண்மையை மூடி மறைக்கும் மாதிரி இந்த விசாரணை இருக்கக் கூடாது. கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற பல கொலை வழக்குகளை தற்கொலை வழக்காக மாற்றப்பட்ட போது அதனை மீண்டும் கொலை வழக்காக மாற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. குறிப்பாக விருத்தாசலம் கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கை ஆரம்பத்தில் தற்கொலை வழக்கு தான் பதிவு செய்தனர். சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்த பிறகுதான் அது ஆணவக் கொலை வழக்காக மாற்றப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கை மூடி மறைக்க நினைத்த காவல்துறை கண்காணிப்பாளரும் ஆயுள் தண்டனை அனுபவிக்க கூடிய நிலை உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு சிபிசிஐடி போலீசார் உண்மையான விசாரணை நடத்த வேண்டும். உண்மை என்ன என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். உண்மையை மூடி மறைக்க கூடாது" என்று தெரிவித்தார்.