tamilnadu

img

சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்பலி நிகழ்ந்தது மன வேதனையை தருகிறது - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட  நெரிசலில் சிக்கி உயிர்பலி ஏற்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த மன வேதனை தருகிறது என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். 
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான பொதுமக்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு முடிந்து திரும்பும்போது கூட்டநெரிசலில் ஏற்பட்டது.
இதில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சேர்ந்த செல்வம் மற்றும் ஜெயலட்சுமி(62) இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். 
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த  திண்டுக்கல் - முனியம்மாள், மூணாறு - பழனி, மதுரை மாவட்டம் செக்கானூரணி - மாரியம்மாள், விரிசல்குளம் - சத்யா, சம்மட்டிபுரம் - ஜெயலட்சுமி, அம்மாபட்டி - மணிமேகலை, ஆவியூர் - வள்ளி, வில்லூர்- பஞ்சவர்ணம், செல்லூர் - மகேஸ்வரி மற்றும் முத்து கிருஷ்ணவேணி, திருமங்கலம் சுதந்திர மணி ஆகிய 11 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரையின் சித்திரைத் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்டுள்ள உயிர்பலியும் , மக்கள் காயமடைந்திருப்பதும் மிகுந்த மன வேதனையை உருவாக்கி இருக்கிறது. 
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர்களை தமிழக அமைச்சர்கள் பி.மூர்த்தி , பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரோடு நேரில் சென்று ஆறுதல் கூறினேன். பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அனைத்துவகையிலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் இஆப , மருத்துவமனை முதல்வர் மரு.ரத்தினவேலு , சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன்  ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவித்துள்ளார். 


 

;