tamilnadu

img

வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் காவல்நிலையம் ஆவணங்களை கைப்பற்றவும் உத்தரவு

மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரைஉயர்நீதிமன்ற கிளை தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விடுவிக்க முயற்சிநடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர். இதற்கிடையே, ஞாயிறன்று சேலம்மாவட்டம் தலைவாசலில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப் பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றஅரசு முடிவு செய்துள்ளது. மதுரை உயர்நீதி கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, இதைத் தெரிவித்து, அனுமதி பெற்று சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்படும் என்றார். 

இந்த நிலையில், சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால், அரசு கொள்கை முடிவு எடுத்த பின்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு முறையிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியநீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.வருவாய் அதிகாரியை காவல் நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறு ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர். 

காவல் நிலையத்தில் இருக்கும் தடயங்கள், ஆதாரங்களை சேகரிக்க கோவில் பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிற்கு உதவ நிபுணர்கள் குழுவை அனுப்புமாறு தடய அறிவியல் கூடுதல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் நியமித்த மாஜிஸ்திரேட்டுக்கு ஒத்துழைப்பு தரமறுத்த காவல்துறை மீது கடும் அதிருப்தியை தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஒத்துழைக்க காவல்துறை மறுப்பதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

;