tamilnadu

img

2,634 பேருக்கு ரூ.202 கோடி கடனுதவி வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

2,634 பேருக்கு ரூ.202 கோடி கடனுதவி  வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 

தஞ்சாவூர், ஆக. 4-  தஞ்சாவூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், தஞ்சாவூர், நாகை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த 2,634 பேருக்கு கடனுதவியை வங்கியின் மேலாண்மை இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை வழங்கினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாக கலையரங்கத்தில், 5 மண்டலங்களைச் சேர்ந்த விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தொழில் முனைவோர் உள்ளிட்டோருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வங்கியின் திருச்சி மண்டல பொதுமேலாளர் ஸ்ரீராம் வரவேற்றார். நிகழ்வில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தொழில் முனைவோர் என 2,634 பேருக்கு ரூ.202 கோடி கடனுதவியை வழங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான அஜய்குமார் ஸ்ரீவாஸ்தவா பேசினார்.  அப்போது அவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடங்கப்பட்டு தற்போது 89 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 70 சதவீத மக்கள் தொழில் செய்யக்கூடிய விவசாயத்துக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கும், விவசாயத்துக்கும் உதவியாக இவ்வங்கி பல்வேறு வகையான கடனுதவியை வழங்கி வருகிறது. அதே போல் தமிழகத்தில் பெண்களின் சுய முன்னேற்றத்துக்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இவர்கள் நேர்மையாகவும், நாணயமாகவும் பெற்ற கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர்.  அதே போல் இந்திய அளவில் தமிழகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முதன்மையான இடத்தில் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதார முன்னேற்றமடைந்து வருகின்றனர். இந்தாண்டு வங்கி மூலம் 20 சதவீதம் விவசாயம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத பெண்கள் எங்களது வங்கி மூலம் கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனர். வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்வில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர்கள் தஞ்சாவூர் வெங்கடசுப்பிரமணியன், நாகப்பட்டினம் நாகராஜன், திண்டுக்கல் சந்திரகுமார், மதுரை ரவி உள்ளிட்ட வங்கி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாயிகள், தொழில் முனைவோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.