tamilnadu

img

ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணக்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன் ஆகியோரை ஆதரித்து பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் புதனன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளிலிருந்து...


ஓ.பி.எஸ் மகனுக்கு தேனி தொகுதியை இன்றைக்கு வழங்கி இருக்கின்றார்கள். ஓ.பி.எஸ் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு ஏதாவது தகுதி அந்த வேட்பாளருக்கு உண்டா? அதைச் சொல்ல முடியுமா? ஒருவேளை சொல்ல முடியாத விஷயங்கள் மர்மமான முறையில் இருக்கலாம். அதை எல்லாம் இன்றைக்கு வெளிப்படையாக இந்த மேடையில் சொல்ல முடியாது. அதைப்பற்றி, இந்தத் தொகுதியில் உள்ள உங்களுக்கு எங்களை விட நன்றாக தெரியும் என்று நான் கருதுகின்றேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நீங்கள் நினைத்துப் பாருங்கள் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மாத்திரம் இன்றைக்கு உயிரோடு இருக்கிறாரென்றால், பன்னீர்செல்வத்தால் தன்னுடைய மகனுக்கு சீட்டு வாங்கி இருக்க முடியுமா? ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன். கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் இதே ஓ.பி.எஸ்-க்கு கூட ஒரு சீட் கிடைப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். தன்னுடைய மானம் போய் விடும், மரியாதை போய் விடும், தான் உயிர் வாழவே முடியாது என்று அம்மையார் ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து கெஞ்சிக்கூத்தாடி அதற்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கொஞ்சம் இறங்கி வந்து சீட்டு தருகின்றேன், நீ சென்னையில் நில் என்று அவருக்கு அறிவுறுத்திய நேரத்தில் இல்லை, இல்லை என்று அவருடைய காலில் விழுந்து, அழுது, புலம்பி சென்னையில் எனக்கு எடுபடாது; எனவே, என்னை தேனி மாவட்டத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டு அதன்பிறகு இந்த பெரியகுளத்திற்கு வந்தார் என்பதை ஓ.பி.எஸ் மறந்திருக்கமாட்டார். 


துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்று சட்டமன்றத்தில் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார் என்பது உங்களுக்குத் தெரியும். தன்னிடத்தில் இருந்த முதலமைச்சர் பதவியை, சசிகலா என்ற பெண்மணி பறித்துக்கொண்டு அதை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டார்; எனவே, இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவரோடு சேர்த்து 11 எம்எல்ஏக்கள் தனிப் பிரிவாக பிரிந்தார்களா இல்லையா? சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்தபொழுது அதை எதிர்த்து ஓட்டு போட்டார்களா இல்லையா? எதிர்த்து ஓட்டு போட்டவர் நிச்சயமாக துணை முதலமைச்சராக இருக்க முடியாது. அதேபோல் அதற்கு துணை நின்ற 11 எம்.எல்.ஏ.க்களும் அந்தப் பொறுப்பில் இருக்கவும் முடியாது. நீங்கள் வேண்டுமானால் பொறுத்திருங்கள் இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்திலிருந்து இதற்குண்டான தீர்ப்பு வரப்போகின்றது. ஏற்கனவே, 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு என்ன காரணம்? நம் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை தினகரன் அணியைச் சார்ந்த 18 எம்.எல்.ஏக்களும் ஆளுநரிடத்தில் கையொப்பமிட்டு கொடுத்தார்கள். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று கொடுக்கவில்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று சொல்லி அந்த மனுவைக் கொடுத்த நேரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் சபாநாயகர், 18 எம்.எல்.ஏ-க்களின் பதவிகளையும் பறித்து நடவடிக்கை எடுத்தார். அதன்பிறகு இந்த பதவி நீக்கம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்திற்குச் சென்றது, நீதிமன்றத்தை எப்படியோ சரிக் கட்டி அவர்கள் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்றார்கள் அது வேறு. நியாயமாக மேல்முறையீட்டிற்கு செல்ல வேண்டும், அவர்கள் செல்லவில்லை. ஏன் செல்லவில்லை? எதற்கு செல்லவில்லை? அந்த 18 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிக்கப்பட்ட காரணத்தினால் தான் நாம் இப்பொழுது 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால் ஓ.பி.எஸ் உடன் சேர்த்து 11 எம்.எல்.ஏ-க்களும் இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று எதிர்த்து ஓட்டுப்போட்டவர்கள். இதில் வேடிக்கை என்னவென்று கேட்டால், ஆதரித்து ஓட்டுப்போட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுவிட்டன. ஆனால் எதிர்த்து ஓட்டுப்போட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் பதவியும் இருக்கின்றன.


எனவேதான், இது தவறு அவர்களின் பதவியை நீக்க வேண்டும் என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் நீதிமன்றத்தை நாடினோம். அந்தப் பிரச்சனைதான் இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றது. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்; சசிகலா அவர்கள் ஓ.பி.எஸ் முதலமைச்சராக அறிவித்தார். அதற்குப் பிறகு, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான என்னைப் பார்த்து சிரித்தார் என்பதற்காக முதலமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்துவிட்டு, தான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கப்போவதாக தெரிவித்தார். அதற்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தந்தார்கள். அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, சசிகலா உட்பட 3 பேர் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இல்லை, ஒருவேளை இருந்திருந்தால் அவரும் இன்றைக்கு சிறையில் தான் இருந்திருப்பார். எனவே, அதைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை. எனவே, அடுத்து முதல்வர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்றபொழுது அவருடைய காலில் விழுந்து தவழ்ந்து எனக்கு அந்த பதவியை தாருங்கள் என்று கேட்டவர் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதை நாம் அனைவரும் வாட்ஸ் அப்பில் பார்த்ததுண்டு. ஜெயலலிதா காலில் விழுந்ததை தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால், சசிகலாவின் காலில் விழுந்து, ஊர்ந்து மண்புழுவைப் போல் ஊர்ந்து சென்ற ஒருவரை பார்த்தோம் என்று சொன்னால் அது எடப்பாடி பழனிசாமி தான். அவர் பதவி ஏற்றதும் ஓ.பி.எஸ் அவர்கள் என்ன செய்தார். உடனடியாக அம்மையார் ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கு சென்று தியானம் செய்து ஆவிகளோடு பேசி அம்மா உங்களது மரணத்தில் மர்மம் உள்ளது அதை பற்றிய முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று பேட்டி தரவில்லையா? எனவே, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் மர்மமான முறையில் நடந்தது என்று நாங்கள் சொல்லவில்லை, ஓ.பி.எஸ் சொல்கின்றார். சட்டத்துறை அமைச்சராக இருக்கின்ற சி.வி.சண்முகம் அவர்கள் பேட்டி கொடுக்கின்றபொழுதும் சொன்னார். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது சென்னை உச்சநீதிமன்றத்தில் வந்தத் தீர்ப்பும் ஊர்ஜிதப்படுத்துகிறது.


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் அ.தி.மு.க வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தீர்ப்பு. காரணம், என்னவென்று கேட்டால், அ.தி.மு.க வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்குகின்ற போது, கட்சியின் பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆதரைஸ் செய்யும் விதமாக ஒரு மனுவில் கையெழுத்திட வேண்டும். ஆனால், உடல் நலிவுற்ற காரணத்தால் அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கையெழுத்திட முடியவில்லை. கைரேகை என்ற அடிப்படையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அப்படிப்பட்ட சூழலில் அவர் உடல் நலிவுற்றிருந்த நேரத்தில் அவரின் சுய நினைவோடு கைரேகை வைக்கவில்லை. எனவே, இந்த வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது. இதை நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தை மறைத்து அல்லது அவர்களின் மரணத்திற்கு காரணகர்த்தாவாக இருந்து பல காரியங்களை செய்து கொண்டவர்கள் தான் இன்றைக்கு இந்த பிரச்சனையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஜெயலலிதாவை வைத்துத்தான் தினகரனும், சசிகலாவும் சம்பாதித்தார்கள் என்று சொன்னது யார் என்றால் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அவர்கள். அவர்கள் சம்பாதித்தார்கள் என்றால், அந்தத் துறையை வைத்துக் கொண்டிருக்கக்கூடிய நீங்கள்தானே ஊழல் செய்து சம்பாதித்து கொடுத்திருக்கின்றீர்கள். இன்றைக்கு நீங்கள் இரண்டாக பிரிந்து விட்டால், அதில் உங்களுக்கு பங்கு இல்லையா? நான் இன்னும் கேட்கின்றேன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், அவருடைய தம்பி ராஜா, வேட்பாளராக நிற்கக்கூடிய ரவீந்திரநாத் கடந்த ஏழெட்டு வருடமாக இந்த ஆட்சியைப் பலவந்தமாக பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து பல லட்சக்கணக்கான ஊழல்கள் செய்து, கோடிக்கணக்கான லஞ்சங்களைப் பெற்று பல அநியாயங்கள் செய்திருக்கிறார்கள் என்று என்னால் பெரிய பட்டியல் போட முடியும். நேரம் இல்லாத காரணத்தினால் சிலவற்றை உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னால்,கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடந்தபொழுது கோடிக்கணக்கான பணம், தங்க கட்டிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.


அதில் ஓ.பி.எஸ் அவர்களுக்கு தொடர்பு இல்லையா? அதேபோல் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தபொழுது அங்கிருந்து கோடிக்கணக்கான பணங்கள் கைப்பற்றப்பட்டன. அப்பொழுது, அங்கிருந்த டைரியில் ஓ.பி.எஸ் க்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று எழுதி இருந்தது. எனவே, இவை அனைத்தும் உண்மையா? இல்லையா? அதேபோல் ஓ.பி.எஸ்ஸின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான ஒருவர் நாகராஜ். நெடுஞ்சாலைத் துறையின் அனைத்து ஒப்பந்தங்களும் அ.தி.மு.க ஆட்சியில் யாருக்கு முழுமையாக தரப்பட்டிருக்கின்றது என்றால் செய்யாதுரை என்கின்ற காண்ட்ராக்டர். அவர் யாரென்றால் ஈ.பி.எஸ் அவர்களுக்கு மிக மிக வேண்டியவர். இப்பொழுது ஈ.பி.எஸ் க்கு மட்டுமல்ல ஓ.பி.எஸ் -க்கும் வேண்டியவராக போயிருக்கின்றார். ஆகவே, மூவரும் சேர்ந்து கூட்டணி அமைத்து கோடிக்கணக்கில் லஞ்சப் பணங்களை மூடிவைத்துக் கொண்டிருக்கின்றார்களே தவிர வேறல்ல. போடி பகுதியில் இருக்கக்கூடிய தோப்புகள், சைதாப்பட்டி கோவில் பகுதியில் இருக்கக்கூடிய நிலங்கள், சோத்துப்பாறை வட்டாரத்தில் இருக்கக்கூடிய நிலங்கள், ஏலக்காய், காப்பித் தோட்டங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் பன்னீர் செல்வத்தின் பெயர்கள் தானே சொல்லப்படுகின்றது. இதை அவரால் மறுக்க முடியுமா? அதுமட்டுமல்ல தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற வட்டாரத்தில் இருக்கக்கூடிய கிரானைட் நிறுவனங்கள், கேரளாவில் இருக்கக்கூடிய டீ எஸ்டேட் இவை அனைத்தும் யாருடைய பெயரில் இருக்கின்றது? இப்பொழுது ஆதாரத்தோடு சொல்கின்றேன். இவை அனைத்தும் உங்களின் பினாமி பெயர்களில் தான் இருக்கின்றது. இதை நிரூபிப்பதற்கு நாங்கள் தயார்.


நான் இன்னும் சொல்லுகின்றேன்! ராக்கன் ஆர்ச் என்ற கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம்தான் தமிழகத்தில் ஒரு பெரிய ஒப்பந்ததாரராக இருக்கக்கூடியவர்கள், பெரிய பெரிய வேலைகள் அனைத்தையும் டெண்டர் எடுத்து செய்து கொண்டிருக்கக்கூடிய கம்பெனி அது. அதேபோல் அன்னை இன்ஃரா டெவலப்பர் என்ற பெரிய நிறுவனம். இந்த இரண்டு நிறுவனத்தில் இயக்குநர்களாக இருக்கக்கூடியவர்கள் யார் தெரியுமா? சுப்ரமணியம், அசோக்குமார், கலைச்செல்வி மற்றும் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக இருக்கக்கூடிய ரவீந்திரநாத் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றார்களா? இல்லையா? கடந்த ஐந்து வருடமாக, கோடிக்கணக்கான பெரிய பெரிய காண்ட்ராக்ட் பணிகள் அனைத்தும் இந்த இரண்டு நிறுவனத்திற்கு தான் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலமாக கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் சேர்த்து வைத்து இருக்கின்றார்கள். இந்தச் செய்திகள் அனைத்தும் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. செய்தி கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்தார், ஆத்திரப்பட்டார், எப்படி நேராக என்னிடத்தில் வராமல் உங்களிடத்தில் வந்தது என்று பொங்கி எழுந்தார். உடனடியாக என்ன செய்தார், ஓ.பி.எஸ்ஸை அழைத்து ஜெயலலிதா அவர்கள் பங்களாவில் உட்கார வைத்து மிரட்டி, அச்சுறுத்தி, அதன்பின் அவரது கூட்டாளிகள். பலர் கைது செய்யப்பட்டார்கள். யார் அந்த கூட்டாளிகள்? மேலப்பட்டி முருகன், சீனி, கந்தசாமி, விருதுநகர் சுந்தரபாண்டியன், ரமேஷ், சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி. இந்நிலையில் ஒரு மிகப்பெரிய காண்ட்ராக்டர் தலைமறைவு. அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அப்பொழுது ஓ.பி.எஸ் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை ஜெயலலிதா அவர்கள் பென்டிரைவில் பதிவு செய்து வைத்திருக்கிறார். ஓ.பி.எஸ் மட்டுமல்ல, எடப்பாடி அவருடைய அமைச்சர்கள் எல்லோரின் வண்டவாளங்கள் எல்லாம் அந்தப் பென்டிரைவில் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதன் எதிரொலிதான் கொடநாடு கொலை சம்பவங்கள்.

;