மறைவுக்குப் பின்னரும் மானுட மேம்பாடு சிபிஎம் நடத்தும் மாபெரும் உடல்தான இயக்கம்
தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவுநாளில் தொடங்குகிறது
சென்னை, செப். 8 - தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடல் தான இயக்கம் அறிவித்துள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், தமிழ்நாடு மாநில செயற்குழு வின் இரண்டு நாள் கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் திங்களன்று (செப். 8) துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பால பாரதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
செப். 12 - சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவு நாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் செப்டம்பர் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில், பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. தான் வாழ்ந்த காலத்தில், மார்க்சிய லட்சியத்திற்காகவும், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அரசியலமைப்பு மற்றும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்ப தற்காகவும் இடைவிடாமல் போராடியவர், தோழர் சீத்தாராம் யெச்சூரி. அவர், மறைவுக்குப் பின்னர், தனது உடலை தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் மருத்துவ ஆராய்ச்சிக் காக ஒப்படைக்க முடிவு செய்தார்.
உடலையும் அர்ப்பணித்த சிபிஎம் தலைவர்கள்
இதற்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நவரத்தின தலைவர் களில் ஒருவரும், மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் முத லமைச்சருமான ஜோதிபாசு, முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட தலைவர் களும் தமது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளனர். நமது மகத்தான தலைவர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, மறைந்த பின்னரும் தமது உடல் மானுட மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்ற உன்னதமான லட்சி யத்தை நமக்கு வழங்கியுள் ளார்கள். அதைப் பின்பற்றி ஏராள மான தோழர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
மருத்துவ ஆய்வுகளுக்கு உதவும் உடல்தானம்
உடல் தானமானது, உடற்கூறு குறித்து மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கும், பயிற்சி பெறு வதற்கும் பயன்படுகிறது. குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை பரிசோதனை செய்து அந்த நோய்களால் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை முறைகளை உருவாக்க முடிகிறது. மேலும், திசுக்கள் அல்லது செல்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து சிகிச்சை மற்றும்மருந்துகள் பற்றிய ஆய்வுகளை யும் நடத்த முடிகிறது. இந்த நிலையில், தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ‘உடல் தான இயக்கத்தை’ சிபிஐ(எம்) முன்னெடுக்கிறது. குடும்பத்தினர் ஒப்புதலுடன் படிவங்களை சமர்ப்பிக்கலாம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் விருப்பம் உள்ள கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், இறப்புக்குப் பின்னர் தம் உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க ஒப்புதல் அளிக்கும் படிவத்தை, குடும்பத்தாரின் சம்மதத்தோடு வழங்கிட கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. ஏற்கெனவே ரத்த தானம், கண் தானம் போன்றவை குறித்து ஓரளவு விழிப்புணர்வு உள்ளது. மூளைச் சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து, பலரின் உயிரை காப்பாற்றுவதை பார்த்து வருகிறோம். இருப்பினும், இறந்த உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்குவது மிக முக்கியமான சமூக பங்களிப்பாகும்.
பொதுமக்களும் பங்கேற்க சிபிஎம் அழைக்கிறது
இயற்கை மரணம் அடைந்தவர்கள், கண் தானம் செய்தாலும் உடல் தானம் செய்ய முடியும். எனவே, சாத்தியமுள்ள அனைவரும் உடல் தான இயக்கத்தில் இணைந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டங்களில் நடைபெறவுள்ள உடல் தான முகாமில் விருப்பமுள்ள கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று உடல் தானம் செய்து தமிழகத்தில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிட வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.