செங்கல்பட்டு, அக். 3- சந்திரயான்-3 இயக்குநர் வீரமுத்து வேலுவுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா செவ்வாயன்று (அக். 3) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயுர் வேதா, யோகா, யூனானி, சித்தா, ஹோமி யோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்தும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பத்மஸ்ரீ விருது பெற்ற வைத்தியா ராஜேஷ் கோட்சா, நிலவில் சந்திரயான்-3 என்ற செயற்கை கோளை நிலை நிறுத்தியதில் சாதனை படைத்த அந்த திட்டத்தின் இயக்கு னர் முனைவர் பி.வீரமுத்துவேல் ஆகி யோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் வழங்கினார். மேலும் 8,513 மாணவர்களுக்கு பட்டங்களையும், பல்கலை, தேர்வில் ரேங்க் பெற்ற 241 பேருக்கு பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் பி.வீரமுத்துவேல் பேசுகையில், உலகளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது, சந்திரயான் 3 விண்கலத்தை சந்திரனில் நிலை நிறுத்தி இந்திய விண்வெளி துறை சாதனை படைத்துள்ளது. சந்திரயான் 3 திட்டம் உருவாக்க கடும் முயற்சி எடுக்கப் பட்டது,
அதன் வெற்றிக்கு எங்களது குழு வின் கடும் முயற்சியே காரணம். எனவே நாம் வெற்றிபெற கடும் முயற்சி தேவை. தோல்வி கண்டு துவண்டு விடாமல் முயற்சி தொடர வேண்டும், அதன் மூலம் வெற்றி காண முடியும் என்றார். முன்னதாக எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் சி.செந்தமிழ்செல்வன் ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி வளாகங்களின் தலைவர் டாக்டர் ஆர்.சிவகுமார், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி, துணை வேந்தர் டாக்டர் எ.ரவிக்குமார், பதிவாளர் சு.பொன்னு சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.