tamilnadu

அதிமுக கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு  தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு  தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 13 - தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த  வேட்பு மனுவில் சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாக கூறி, வேலூரைச் சேர்ந்த  தொழிலதிபர் ராமமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.  இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  தேர்தல் ஆணையம் தரப்பில் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணை யம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஜூலை 9  ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.