ஒருவருக்கு ரூ.133.30 மட்டுமே ஜிஎஸ்டி குறையும் ; பாஜகவினராவது தீபாவளி கொண்டாட முடியுமா
திருப்பூர், செப்.8 – ஜிஎஸ்டி குறைப்பு தீபாவளி பரிசு என்று பாஜக புகழ்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்தார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஓடக்காடு கிளை புதிய அலுவலக கட்டடமான தோழர் கே.தங்கவேல் நினைவகத்தை, ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்து உரையாற்றிய பெ.சண்முகம், “ஜிஎஸ்டி வரியை ஏற்றியது யார்? மக்களின் முதுகெலும்பை உடைக்கும் அளவுக்கு வரியைப் போட்டது இவர்கள்தானே? அண்டா அளவுக்கு வரியை ஏற்றி வசூலித்து விட்டு, கரண்டியில் எடுக்கும் அளவிற்கு கொஞ்சம் வரியை குறைத்திருக்கிறார்கள்” என்று சாடினார். 2024இல் ரூ.21.50 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலித்து, இப்போது ரூ.48 ஆயிரம் கோடி குறைத்திருக்கிறார்கள். 145 கோடி மக்களுக்கு இது ஒருவருக்கு மாதம் ரூ.133.30 பைசா மட்டுமே! வருடத்திற்கு வெறும் ரூ.1600 மட்டுமே! இதற்கு பாஜகவினராவது தீபாவளி கொண்டாட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். மன்னிக்க முடியுமா? “முக்கியமாக ரப்பர், பென்சில், சார்ப்னர் ஆகியவற்றுக்கு வரி குறைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயன்படுத்தும் இந்த பொருட்களுக்கு முதலில் வரி போட்டதை மன்னிக்க முடியுமா? ஆனால் நம் மக்கள் வழக்கமாக சாப்பிடக்கூடிய இட்லி, தோசை, மாவு, அரிசிக்கு ஜிஎஸ்டி குறைக்க ப்படவில்லை. ரொட்டிக்கு மட்டும் ஜிஎஸ்டி குறைத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் ரொட்டி தான் உணவு. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழர் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டி ருக்கிறார். தில்லியில் இருப்பதாலோ என்னவோ இட்லி தோசையை மறந்து விட்டார் போலும்!” என்று கடுமையாக விமர்சித்தார். ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீட்டு வரி நீக்கப் பட்டது நல்ல விஷயம் என்றாலும், அதுவும் காப் பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினரும், இடதுசாரி களும் தொடர்ச்சியாக வலியுறுத்தியதால் மட்டுமே என்றார். மத வெறியாட்டம் பெ.சண்முகம் மத அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். “விநாயகர் சதுர்த்தி கொண்டாடி பத்து நாட்கள் கழிந்த பிறகும் தட்டி களை அகற்றாமல் இருக்கின்றனர். வணங்கத்தக்கவரை யாராவது அடிப்பார்களா? ஏரி குளங்களில் விநாயகரை கரைக்கிறோம் என்று சிலையில் ஏறி அடிக்கின்றனர். விநாயகருக்கு யானைத்தலை வைக்கப்பட்டதை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அப்போதே இருந்தது என்று மோடி சொல்கிறார். இவர்களுக்கு பக்தி கிடையாது. மக்களின் மத நம்பிக்கையை பயன்படுத்தி மதவெறி அரசியலை செய்கின்றனர்,” என்று தெரிவித்தார். அறிவியல் அணுகுமுறை “இன்று சந்திர கிரகணம். கிரகணத்தின்போது வெளியே வரக்கூடாது, சாப்பிடக் கூடாது என்று மூடநம்பிக்கையை உருவாக்கி வைத்திருக் கிறார்கள். ஆனால் இது ஒரு இயற்கையான நிகழ்வு. அறிவியல் இயக்கத்தினர் பல்லா யிரக்கணக்கான மக்களிடம் இதை கண்டு களிப்ப தற்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்து கின்றனர். மூடநம்பிக்கை எதிர்ப்பு, அறிவியல் கருத்து பிரச்சாரம் நமது தொடர்ச்சியான பணி,” என்றார். பைசா பிரயோஜனமில்லாத நட்பு “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25% அபராத வரிவிதித்துள்ளார். குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவது குற்றமா? உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என்று மொட்டைத் தலைக்கும் முழங்கா லுக்கும் முடிச்சு போடுகின்றனர். விசா இல்லை என இந்தியர்களுக்கு விலங்கு பூட்டி அனுப்பியவர் தான் டிரம்ப். 50 சதவீத வரி விதித்த டிரம்ப்பை பற்றி மோடி ஒரு வார்த்தை பேசினாரா? மோடி- டிரம்ப் நட்பினால் இந்தியாவுக்கு பைசா கூட பிரயோஜ னம் இல்லை,” என்றும் பெ.சண்முகம் விமர்சித்தார். ஆபத்தில் திருப்பூரின் தொழில் எதிர்காலம் “இந்தியாவுக்கே வாழ்வளிக்கக் கூடிய ஊர் திருப்பூர். வாழ்வதற்கு வழி இல்லாத உழைப்பாளி மக்கள் இங்கு வந்து வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடல் இல்லை, கப்பல் போக்குவரத்து இல்லை, விமானம் இல்லை, இருந்தாலும் இந்தியாவில் நம்பர் ஒன் ஏற்றுமதி மையமாக திருப்பூர் இருக்கிறது என்றால் அதற்கு இங்குள்ள உழைப்பாளி மக்களும், தொழி லதிபர்களும் மேற்கொண்டுள்ள கூட்டு உழைப்பி னால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது,” என்று பெ.சண்முகம் பாராட்டினார். அதே வேளையில், “இந்த வரி விதிப்பிற்குப் பிறகு தொடர்ந்து வேலை தருவார்களா? உற்பத்தி நடைபெறுமா? இல்லையென்றால் இவர்களுக்கு எப்படி வேலை தருவார்கள்? தொழிற்சாலை மூடப் பட்டால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும்” என்றும் கவலை தெரிவித்தார். “இங்கு மட்டுமல்ல, கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தூத்துக்குடி, நாகப்பட்டினம், தோல் தொழிற்சாலைகள் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற நக ரங்களும், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் நடைபெறும் ஓசூர், முந்திரி உற்பத்தி செய்யும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், ஜெயங் கொண்டம், குஜராத்தின் சூரத், அகமதாபாத் என நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்படும்” என்று விரிவாக எடுத்துரைத்தார். ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு “ஏற்றுமதியாளர் சங்கத்தில் சில நபர்கள் பாஜகவுக்கு அச்சப்பட்டு ‘தொழில் நன்றாக நடைபெறுவதாக’ சொல்வதால் உங்கள் தொழிலை பாதுகாக்க முடியாது. அரசை நிர்பந்த ப்படுத்துவது தான் தொழிலை பாதுகாப்பதற்கான ஒரே வழி. கேள்வி இன்றி பணிந்து போனால் தொழில் அழியும், மக்களின் வாழ்வாதாரம் அழிந்து விடும்,” என்று தெளிவாக எச்சரித்தார். “தொழில், தொழிலாளிகள், விவசாயிகள் வாழ்வை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நிற்கும். அமெரிக்க ஆதரவு கொள்கைகளை இந்திய அரசு கைவிட்டு சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை, பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். சுயசார்பு வெளியுறவு கொள்கை தான் நமக்கு பாதுகாப்பு,” என்று பெ.சண்முகம் வலியுறுத்தினார்.