tamilnadu

img

தன்னிச்சையாக கருத்து கூறும் ஆளுநர்: அமைச்சர் சாடல்

சென்னை,பிப்.8- தமிழ்நாடு சட்டப் பேரவையில்,  நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,“ தமிழ்நாட்டில் பல் மற்றும் மருத்துவ கல்வி உள்பட அனைத்து தொழிற்கல்வி சேர்க்கையில் பொது நுழைவு தேர்வை முழுவதுமாக ரத்து செய்து,  12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதையும், இதற்காக எம்.அனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு கொடுத்த பரிந்துரை, அதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையில்  சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டம் இயற்றப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் விரிவாக சுட்டிக்காட்டினார்.

பொது நுழைவு தேர்வை ரத்து செய்த தமிழ்நாடு, நன்கு ஆராய்ந்து நீக்கி ஒளிவு மறைவற்ற ரீதியில் மாணவர் சேர்க்கை நடத்தி வந்த நிலையில் மாநில அரசின் மருத்துவ இடங்களுக்கு அறிமுகப்படுத்திய நீட்  தேர்வை அறிமுக காலத்தில்  இருந்தே அதிகாரப்பூர்வமாக வும், சட்ட ரீதியாகவும் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியும், கொள்கை ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வை மீறியும் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கை நீட் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது. இதில் இருந்து முறையாக விலக்கு பெற ஏற்கனவே 2017-ல் இயற்றிய சட்டத்திற்கு குடியரசு தலைவரால் ஒப்புதல் நிறுத்தி வைத்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து இது குறித்து ஆராய்ந்து விரிவாக அறிக்கை பெற்று அதன் பின்புதான் இந்த புதிய சட்ட முன்வடிவு 13.9.2021-ல் ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ள இந்த சட்ட முன்வடிவை ஆளுநர் அரசியல் சட்ட அமைப்பின்படி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு ஆளுநருக்கு 18.9.2021 அன்று அனுப்பப்பட்டது. அதன் பிறகு முதமைச்சரும் ஆளுநரை இருமுறை சந்தித்துள்ளார். இருப்பினும் 142 நாட்களுக்கு பிறகு சில காரணங்களை சுட்டிக்காட்டி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களின் மறுபரிசீலனைக்கு ஆளுநர், பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார்.  ஆளுநர், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன்படி சட்டமுன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி, குடியரசு தலைவருக்கு சட்ட முன்வடிவு தொடர்பான சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் மீண்டும் ஆளுநர் மூலம் இந்த சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமே தவிர தன்னிச்சையாக ஆளுநர் சம்பந்தப்பட்ட சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளது அரசியல் சட்ட அமைப்பின்படி சரியான முடிவு அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்தினையும் அதன் மீதான அரசின் விளக்கங்களையும் ஒவ்வொன்றாக விளக்கினார். அதில், முதலாவதாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவின் அறிக்கைதான் இந்த சட்டமுன்வடிவுக்கு அடிப்படை என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது உண்மையல்ல.  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்தும், பொதுமக்களின் கருத்தினை பெற்றும், சட்ட நுட்பங்களை விரிவாக ஆராய்ந்தும் 7 பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தலைமைச் செயலாளரின் தலைமையில் பல்வேறு செயலர்கள் கொண்ட குழு ஆராய்ந்து அதில் உள்ள 3-வது பரிந்துரையை ஏற்றுக்கொண்டு சட்டத்துறை மூலம் ஆராய்ந்து இந்த சட்டமுன் வடிவு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, ஆளுநர் கூறியது முற்றிலும் தவறான கருத்து.

அடுத்ததாக, நீதிபதி தலைமையிலான உயர்மட்டக்குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நீட் நோக்கமற்றது, நீட் தேர்வு தகுதிக்கு எதிரானது என்றும், நீட் தேர்வினால் திறன் குறைவான சமுதாயத்தில் முன்னேறிய பணம் படைத்த மாணவர்கள் மருத்துவத் துறையில் இடம் பெறுவர் என்றும் மற்றும் மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு, அதற்கு நீட் தேர்வு முறை திறனை வளர்ப்பது இல்லை போன்ற கருத்துக்களை, யூகங்கள் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதிலும் ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் முற்றிலும் தவறான கருத்தாகும். ஆளுநரின் கருத்து இந்த உயர்மட்டக்குழுவினை அவமானப்படுத்துவது போல் உள்ளது.  மூன்றாவதாக, இயற்பியல் மற்றும் உயிரியல் தேர்வில் திறன் பற்றி கூறாமல் அனைத்து வகை பொது அறிவு குறித்து வரையறுக்கப் படாத கருத்துக்கள் கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுவும் உண்மையில்லை,  12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தேர்வு எழுதி அந்த பாடங்களில் மாணவர்களின் அறிவு சோதிக்கப்படுகிறது. நீட் தேர்வு கட்டாயமாக்கும் முன்பு வரை 12 ஆம் வகுப்பு தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடை பெற்றது. நீட் தேர்வு முறை பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உயர்மட்டக்குழு தனது அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளது. உண்மை நிலையும் அதுவே. நான்காவதாக, உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஒரு தலைபட்சமான முடிவினை அளித்துள்ளது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். புள்ளி விவரங்களை ஆய்வு செய்தது மட்டுமின்றி குழு பொது மக்களிடம் விரிவாக கருத்து கேட்டு அதனை வல்லுநர்களிடம் ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு முறைக்கு எதிராக சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

அடுத்து, சி.எம்.சி. வேலூர் குறித்த ஒன்றிய அரசு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நீட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இதிலும் அவரது அனுகுமுறை சரியல்ல. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படையில், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர்த்துவிட்டு, ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது சரியான அணுகுமுறை அல்ல. அரசியல் சட்ட அமைப்பில் மாநில அரசுக்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் உள்ளது. எந்த ஒரு சட்டமும், ஏதாவது ஒரு ஒன்றிய அரசின் சட்டத்திற்கு மாறாக இருந்தால் அதற்கு அரசியல் சட்ட அமைப்பு 254(2)-ன் கீழ் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. சட்டமன்றத்தால் சட்டமே இயற்றக்கூடாது என்று ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுவது, அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார் ஆளுநர். மேலும், மாநிலச் சட்டங்கள் மட்டுமே அம்மாநில பாடத்திட்டத்திலும் அம்மாநிலத்திலேயே பிற பாடத்திட்டங்களிலும் பயிலும் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும். ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநிலங்களுக்கு இது போன்ற சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.