தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைத்து அரசு உத்தரவு
சென்னை, செப். 12- தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் “முந்திரி சாகுபடி பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்” என அறிவித்திருந்தார். அதன்படி தற்போது, தமிழ்நாட்டில் மாநில அளவிலான முந்திரி வாரியத்தை அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, “தமிழ்நாடு முந்திரி வாரியம்” கடலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் இவ்வாரியத்தின் தலைவராகவும், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத் தலைவராகவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் அவர்கள் உறுப்பினர் செயலராகவும் பணியாற்றுவார்கள். தமிழ்நாட்டின் முந்திரி உற்பத்தி, முந்திரித் தொழிற்சாலைகளின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளதால், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பதப்படுத்தப்படாத முந்திரிக் கொட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முந்திரி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.