tamilnadu

img

ஏற்கெனவே முடிவு செஞ்சிட்டோம்; யாருக்கு போடனும்னு...

“மோடியா... அவரு உலகத்த சுத்திப் பாக்குறதுக்காக ஜெயிச்சாரு... வேறென்ன செஞ்சாரு...” - மல்லிகைப்பூக்களை வேகமாக கட்டிக் கொண்டே முகத்தில் அடித்தாற்போல் அந்தப் பெண் சொல்லத் துவங்கினார். கைகளில் உழைப்பின் தீவிரம். கண்களில், உண்மையைச் சொல்கிறோம் என்கிற வெளிச்சம். வெள்ளந்தி யான சிரிப்பு. மெல்ல மெல்ல... பேசப் பேச அந்த வெள்ளந்தியான முகம் கோபமடைகிறது. ஆக்ரோஷ மடைகிறது. “மோடி அப்படிங்கிற பேச்சுக்கே இட மில்லை. திரும்பிப்பாக்க விடாம ஓட வைப்போம்.கொஞ்சமா கொடும செஞ்சார் அந்தாளு. இப்படி ஒரு மனுஷன இந்தியா இதுவரைக்கும் கண்டதில்ல. விடவே மாட்டோம்...” ஆவேசத்துடன் பொரிந்து தள்ளினார். ஒரு பெண்மணி மட்டுமல்ல, அங்கே 20க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தார்கள். மோடியும் மோடியைச் சார்ந்தவர்களும் அவரது ஊதுகுழல்கள் யாராக இருந்தாலும் சிக்கினால் தொலைந்தார்கள் என்பது போல இருந்தது அவர்களது பேச்சும் ஆவேசமும். “ஒரு கடையில போயி பலசரக்கு வாங்க முடியல, அதுக்கும் வரி போட்டான் அந்தப் பாவி” என்று ஒரு பெண். “அம்மா சாவுக்கு வந்தாரு, சசிகலா தலையிலதடவினாரு... மொத்த அதிமுகவையும் பாக்கெட்ல வைச்சிகிட்டு போயிட்டாரு. ஒரு அம்மா இறந்தே போச்சு. சின்னம்மா ஜெயி லுக்குப் போச்சு. சிக்கியது அடிமைகள் ஆட்சி. தமிழ்நாட்டுக்கு எல்லாமே போச்சு” என்று ஆத்திரத்தை கொட்டினார் ஒரு மூதாட்டி. “படிச்ச புள்ளைகளுக்கு வேலையில்ல. இனிபடிக்கவும் முடியாதுன்னு சொல்றாங்க. நீட் வந்திருக்காம். இதெல்லாம் அநியாய மில்லையா?’’ என்றார் ஒரு இளம்பெண்.ரூபாய் நோட்டு செல்லாதுன்னு திடீர்னு சொன்னான் பாருங்க... அதை மன்னிக்கவே முடியாது.


எத்தன ஜனங்க வரிசையில நின்னு செத்தாங்க. மறந்துருவோம்னு நினைச்சாங் களா... இப்போ நம்ம அக்கவுண்டல இருக்கிற காசஎடுக்கிறதுக்கும் காசு பிடிக்கிறாங்க... மினிமம் பேலன்ஸ் ஆயிரக்கணக்கில சொல்றாங்க. அன்றாட வேலை செஞ்சு பிழைக்கிறவங்க அவ்வளவு காசு வச்சிருக்க முடியுமா? - கொந்தளித்து கொட்டினார் மற்றொரு பெண்மணி. இந்தப் பாட்டிய பாருங்க, முதியோர் பென்சன் கிடைச்சு ஏழு வருசமாச்சு. நடையா நடக்குறாங்க. எங்கே போனாலும் லஞ்சம். கொடுத்தும் பிரயோஜனம் இல்லை... அதோ அந்தப் பொண்ணு வீட்டுக்காரர் இறந்து மூணு வருசமாச்சு... கஷ்டப்படுது... விதவை பென்சன் அப்ளை பண்ணியும் கிடைக்கல. யாரிடமும் கேட்டும் நடக்கல. அன்றாடம் உழைச்சா பிழைப்பு. ஆனால் அந்தப் பிழைப்பிலும் மண் அள்ளிப் போட்டதுதான் மோடியோட சாதனை. அந்த ஆள விட்டு வைப்போம்னு நினைக் கிறீங்களா? - பொருமித் தள்ளினார் ஒரு தாய்.- இவ்வளவு கோபம் மோடி மீதும் எடப்பாடிமீதும் இந்த எளிய பெண்களுக்கு இருக்கிறதாஎன ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டி ருந்தார்கள் சுதா சுந்தரராமனும், சுகந்தியும், பிரீதியும், சசிகலாவும். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்கா? என்ற கேள்வியை லேசாக கேட்டது தான் தாமதம்... ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்கப் பேசினார்கள்.முந்தியெல்லாம் பெண்களுக்கு பாது காப்பு இல்ல அப்படின்னு சொல்லதான் கேட்டுருக்கோம்... இப்போ குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. பெண் குழந்தைகள தைரியமா நம்பி யாரிடமும் விடமுடியல. சமூ கத்தையே சீரழிச்சி வச்சிருக்கான் ஆட்சி செய்றவன். பாலியல் கொடுமைகள் நடந்தா நட வடிக்கையில்ல. போலீசே மோசமா இருக்கான். பொள்ளாச்சியில நடந்த கொடுமையை கேட்கவே அதிர்ச்சியாகவும் ஆத்திரமாகவும் இருக்கு. இப்போ கோயம்புத்தூருல ஒரு சின்னக்குழந்தைய பலாத்காரம் பண்ணி கொன்னுட்டாங்க. கேட்க கேட்க மனசெல்லாம் பதறுது. எந்த பதற்றமும் இல்லாம மோடியும் எடப்பாடியும் திரியிறாங்க. எல்லாத்துக்கும் அடிகொடுப்போம் - என்று ஒரே குரலில் குமுறினார்கள். சரி... வெயில் காலம் வந்துவிட்டது, கோயம்புத்தூருல குடிதண்ணீர தனியார் கம்பெனிக்கு கொடுத்துட்டாங்க. மதுரையில அப்படி செஞ்சா என்ன செய்வீங்க என்று கேட்டார் சுகந்தி. ‘கொன்னே போடுவோம்.’ பயங்கரமான பதிலைச்சொன்னார் ஒரு பெண். சரி... இவ்வளவு பேசுறீங்களே... எங்களுக்கு ஓட்டுப் போடுங்கன்னு அவங்க வந்து பணம் கொடுத்தா என்ன செய்வீங்க. - ஆர்வத்துடன் கேள்வியை முன்வைத்தார் சுகந்தி. - “அவங்க அப்பன் வீட்டுப்பணமா? எங்க பணம்தானே அது. ஆனா ஓட்டு அவங்களுக்கு கிடையாது. அது அவங்களுக்கே தெரியும். நாங்கஎல்லோரும் ஏற்கெனவே முடிவு செஞ்சிட்டோம், யாருக்கு போடனும்னு, எங்களுக்குத் தெரியாதா?”சரி... யாருக்கு போடுவீங்க..?- கேள்வியை முடிக்கும் முன்பு சட்டென பதில் வந்தது...“வெங்கடேசன் சூப்பரா ஜெயிப்பாரு... போதுமா! நீங்க சொல்லவே வேணாம். எங்க ளுக்கு தெரியும். மோகனய்யா போல ஒரு மனிதர்இல்லை. கம்யூனிஸ்ட் போல ஒரு கட்சி இல்ல!”ஒரே குரலில் ஒட்டுமொத்த பெண்களும் கூறியதைக் கேட்டு, நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டு அடுத்த இடத்திற்கு புறப்பட்டார்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா, தலைவர் ராஜேஸ்வரி, பிரீதி உள்ளிட்ட நிர்வாகிகள்.


மதுரை ஆரப்பாளையம் அருகே ஒரு குடி யிருப்புக்குள் நடந்த வாக்காளர் சந்திப்பில்தான் மேற்கண்ட உரையாடல்.இதேபோல மதுரை மாநகரின் பல பகுதி களில் பகவதி, மா.செல்லம், தமிழரசி, ஜெயா, அங்கயற்கண்ணி, ஜோதி லட்சுமி, மல்லிகா, பசும்பொன், செல்வி, சித்ரா உள்ளிட்ட மாதர் சங்கநிர்வாகிகள் பெண்களை சந்தித்து வருகிறார்கள்.மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மாநகர் முழுவதும் பெண்கள் சந்திப்பு நிகழ்வு களை கடந்த ஒரு வாரகாலமாக நடத்தி வரு கிறது மாதர்சங்கம்.“இதுவரை 20 இடங்களில் பெண்களை உரையாடல் கூட்டமாக சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்வுகளிலும் 20 பெண்கள் முதல்50 பெண்கள் வரை பங்கேற்கிறார்கள். அவர்களிடம் வாழ்க்கை நிலை குறித்து உரையாடு கிறோம். அந்த உரையாடல்களில் ஒவ்வொரு பெண்ணின் - ஒவ்வொரு குடும்பத் தலைவியின் உள்ளத்திலும் மோடிக்கு எதிராகவும்எடப்பாடி ஆட்சிக்கு எதிராகவும் ஒரு புயலே உருக்கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. மோடியும், பாஜகவினரும் தங்களுக்கு இன்னும் செல்வாக்கு இருப்பதாக மூடநம்பிக்கை யில் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில், ஏழை - எளிய நடுத்தர மக்கள் மத்தியில், இன்னும் குறிப்பாக, பெண்கள் மத்தியில் மோடி மீதும் அவரது ஆட்சியின் அலங்கோலங்கள் மீதும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. அது இந்தத்தேர்தலில் மோடி ஆட்சிக்கும் அவரது கட்சிக்கும்தமிழகத்தில் அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கிற அதிமுக ஆட்சியாளர்களுக்கும் தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்களும் சரியான அடி கொடுப்பார்கள் என்பதை மதுரையின்வீதிகளில் எதிரொலிக்கிறது. ஒரு பெண்கூட மோடி நல்லவர் என்றோ, வல்லவர் என்றோ கூறவில்லை. இதுவரை பார்த்ததிலேயே கேடு கெட்ட, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான ஆட்சியாளர் நரேந்திர மோடி என அழுத்தம் திருத்தமாக பெண்கள் சொல்கிறார்கள்” என்று தனது பிரச்சாரக் கள அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் பி.சுகந்தி.இதே அனுபவங்களை மதுரை தொகுதி யின் புறநகர் பகுதிகளில் வீடு வீடாக பெண்களைசந்தித்து சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமை யிலான குழுவினரும் தெரிவித்தார்கள்.“கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பது; விலைவாசி கொஞ்சம் கூட இறங்காமல் ஆகாயத்திலேயே இருப்பது; எதையுமே கவனிக்காமல் பிரதமர்மோடி வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டி ருப்பது; ரூபாய்நோட்டு செல்லாது என்று அறிவித்து மக்களை தவியாய் தவிக்கவிட்டது என ஒவ்வொரு கொடுமையையும் நினைத்து நினைத்து நம்மிடம் குமுறுகிறார்கள் பெண்கள்” என்கிறார் வாலண்டினா.புறநகர் பகுதிகளில் 6 குழுக்களாக பிரிந்து 25 ஆயிரம் குடும்பங்களை நேரில் சந்திப்பது என்றமுடிவோடு, கடுமையான வெயிலிலும் களப்பணி யாற்றிக் கொண்டிருக்கும் சிஐடியு மாநில செயலாளர் மகாலட்சுமி, மாதர் சங்கத்தின் மாநிலநிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் களான உஷாபாசி, ரேணுகா, பிரேமலதா, செ.முத்துராணி, வெண்மணி, வனஜா, ஜானகி,கோமதி, பாக்கியலட்சுமி, லிங்கராணி, மல்லிகா,தமிழ்ச்செல்வி, மார்க்சியா, பழனியம்மாள், ராணிஉள்பட ஒவ்வொருவரும், பெண்களுடனான சந்திப்பின்போது அவர்களது குமுறலும் கோபமும் மோடி ஆட்சியை தொலைத்துக் கட்டுவதில் தீராத ஆத்திரத்துடன் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது எனத் தெரிவித்தார்கள். இவர்களுடன் மதுரை புறநகர் மாவட்ட மாதர் சங்கநிர்வாகிகள் பர்வதவர்த்தினி, ஈஸ்வரி, வேலம்மாள், மோகனவிஜயா, விஜயா, கௌரி, சின்னம்மாள், சுமதி, இந்திரா, மலர்விழி, அமிர்தவள்ளி, சித்ரா, தேவி உள்ளிட்டோரும் வீடு வீடாக பெண்களை சந்தித்து வருகின்றனர்.மதுரை தொகுதியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு; ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல!


எஸ்.பி.ஆர்., பா.ரணதிவே, ஹேமாவதி, அஜித்

;