குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் அளித்திடுக! பெற்றோர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
நாகர்கோவில், ஜூலை 9- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பஞ்சலிங்கபுரம் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஜூலை 9 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் அளித்து,பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், பஞ்சலிங்கபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை, சமையலறை, பொருட்கள் வைக்கும் இடம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், குழந்தைகளுக்கான கழிப்பறை, குடிநீர் வசதி, உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, சுற்றுவட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்துக்கள், தடுப்பூசிகள், ஊட்டசத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் அங்கன்வாடி மையத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்து கேட்டறிப்பட்டதோடு, இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு முகாமிற்கு வந்த தாய்மார்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. தவறாமல் குறித்த காலங்களில் தடுப்பூசி செலுத்தி, குழந்தைகளின் வளர்ச்சி, குழந்தைகளின் வளர்பருவமாற்றங்களை கண்காணிக்க வேண்டும். மேலும் ஏதேனும் குறைபாடுகள், அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதித்து, உரிய சிகிச்சை மேற்கொள்ள தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அலுவலர் கைது
தஞ்சாவூர், ஜூலை 9- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் கே. இளங்கோவன்(60). இவர், சுகாதாரத் துறையில் பூச்சியியல் வல்லுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து 12 பேரிடம் மொத்தம் ரூ.38.09 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், யாருக்கும் அவர் வேலை வாங்கித் தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட கும்பகோணம் துக்காச்சியைச் சேர்ந்த ரவி மகன் அருண்(23) தஞ்சாவூர் மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறையினர் திங்கட்கிழமை வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனர்.