tamilnadu

தூய்மைப் பணியாளர்களுக்கு கட்டணமில்லா உணவு

தூய்மைப் பணியாளர்களுக்கு  கட்டணமில்லா உணவு

தமிழக அரசு அனுமதி

சென்னை, அக். 23 - தூய்மைப் பணியாளர்களின் நலனை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்படும். இதற்காக தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இம்முறை செயல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவது அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான பல்வேறு நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  குறிப்பாக, குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும். பணியின்போது உயிரிழக்கும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். சுய தொழில் தொடங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு முப்பதாயிரம் புதிய குடியிருப்புகள் கட்டி வழங்கப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் இலவச காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.