tamilnadu

img

வருசநாட்டில் 1595 குடும்பங்களை வெளியேற்ற வனத்துறை முயற்சி!

வருசநாட்டில் 1595 குடும்பங்களை வெளியேற்ற வனத்துறை முயற்சி

10 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ; விவசாயிகள் அதிர்ச்சி 

தேனி, அக். 24 - வருசநாடு மலைக்கிராமங்களில், முதற் கட்டமாக 3 தலைமுறைக்கு மேல் குடியிருந்து வரும் 1595 குடும்பங்களை வெளியேற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ள நிலையில், விவசாயிகள் - பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் தள்ளப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கட மலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம், மேகமலை பகுதியில் 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 39 கிராமங்களில், வன விவசாயிகள், விவசாய கூலிகள் என சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர், பல தலைமுறைகளாக வன நிலங்களில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தனிநபர் தொட ர்ந்த வழக்கில் விவசாயிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலேயே சீராய்வு மனு தாக்கல் செய்யுமாறு 2019-இல் உத்தரவிட்டது.  அதன்படி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2018-இல் தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி யால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்த வழக்கில், வன உரிமைப் சட்டப்படி  தீர்வு கிடைப்பதற்கு தமிழக அரசும் இந்த வழக்கில் இணைந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக மனுத் தாக்கல் செய்ய வேண்டும்; அதுவரை நிலங்களில் விவசாயப் பணிகளை செய்ய விடாமல் வனத்துறையினர் தடுக்கக் கூடாது; இப்பகுதி விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வன உரிமைச் சட்டம் 2006-இன் படி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து போராடி வருகின்றன. மக்களை வெளியேற்ற மீண்டும் சதி  இந்நிலையில், மேற்கண்ட வனப்பகுதி களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேக மலை - ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து மலைக்கிராம பொதுமக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.  அதனொரு பகுதியாகவே, மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட முத்துலாபுரம், காமன்கல்லூர், இந்திரா நகர், கோம்பைத் தொழு, ராஜீவ் நகர், கீழ பொம்மராஜபுரம், கீழ இந்திரா நகர், வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட காந்தி கிராமம், வீருசின்னம்மாள்புரம் வண்டியூர், தேக்கலை குடிசை, மஞ்சனூத்து, அரசரடி, அஞ்சரப்புலி, நொச்சியோடை, கண்ட மனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மூலக்கடை, மந்திசுனை, சோலைத்தேவன்பட்டி, கொங்கரேவு, நரியூத்து, சுக்கான் ஓடை, மாளிகைப்பாறை கோயில், ஆத்துக்காடு, தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் 1595 குடும்பங்களை வனத்திலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த 1595 குடும்பங்களும், 3 தலை முறைக்கும் மேலாக, இங்கு வசித்து வரு பவர்கள். 1679 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயத்தையே 3 தலைமுறையாக வாழ்வாதாரமாக கொண்டிருப்பவர்கள். அவ்வாறிருக்க, முதல்கட்டமாக இந்த  1595 குடும்பங்களை வெளியேற்ற திட்ட மிட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இது பொது மக்கள், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம். நாகராஜ், வனத்துறை தரப்பில் வெளியிட்டுள்ள வெளியேற்ற பட்டியல் உண்மை தானா? இந்தப் பிரச்சனையில் அரசின் நிலைபாடு - நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். 1595 குடும்பங்களும் விவசாயிகள். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார். இதற்கு நேரடியாகப் பதிலளிக்காத அதிகாரிகள், இப்பிரச்சனையில் விரிவாகப் பேச வேண்டியுள்ளது என மழுப்பலாக தெரிவித்துள்ளனர்.            (ந.நி.)