திருவண்ணாமலை கோவிலில் தீ விபத்து
திருவண்ணாமலை, செப் 5- திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் மலை மீது திடீரென காட்டுத்தீ ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை அருணாச்ச லேஸ்வரர் கோவில் தீப மலையின் பின் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென காட்டுத் தீ பரவியது. சமீபமாகவே தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் 2,668 அடி உயரம் உள்ள தீப மலையின் மீது ஏறி வரும் நிலையில், அனுமதியின்றி மலை ஏறிய பக்தர்களால் ஏற்பட்ட தீ விபத்தா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல திருவண்ணாமலையைச் சுற்றிவரும் போலி சாமியார்கள் அனுமதி இல்லாமல் மலையேறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல மலை மீது எரிந்து வரும் தீயை அணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர்.