tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அரசு பொதுத்துறை நிறுவனங்களில்  காலிப் பணியிடங்களை நிரப்பிடுக!  வாலிபர் சங்க குத்தாலம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஆக. 11-  மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குத்தாலம் கிழக்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் டி. தவசி தலைமை வகித்தார். முன்னதாக கோரிக்கை முழக்க பேரணியை முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் சி.விஜயகாந்த் துவக்கி வைத்தார். ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். வெற்றிசெல்வன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஷ் முன் மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட துணைச் செயலாளர் பவுல் சத்தியராஜ் உரையாற்றினார். அரசியல், ஸ்தாபன வேலையறிக்கையை ஒன்றிய செயலாளர் ஆர்.ஸ்டாலின், வரவு, செலவு அறிக்கையை ஒன்றியப் பொருளாளர் எஸ். ரகுவரன் முன்வைத்தனர்.  மாநாட்டினை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி. வைரவன், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர்.  மாநாட்டில், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மயிலாடுதுறை மங்கநல்லூர், பெரம்பூர், பொறையார் வழியாக நாகப்பட்டிணம் வரை செல்லும் அரசுப்பேருந்துகள் பள்ளி, கல்லூரி செல்கின்ற மாணவர்கள் நலன் கருதி சரியான நேரத்தில் தடையின்றி இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஒன்றியத் தலைவராக டி. தவசி, செயலாளராக ஆர். ஸ்டாலின், பொருளாளராக ராஜேஷ், துணைத் தலைவராக வெற்றிச்செல்வன்,  ஒன்றிய துணைச் செயலாளராக சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யபட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்து மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன் நிறைவுரையாற்றினார்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திடுக! மமக தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை

பாபநாசம், ஆக. 11-  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான  ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:  சென்னை மாநகராட்சியின்  ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 1,953 பேர் பணி செய்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணி செய்து வரும் அவர்கள் ஊதியமாக ரூ.23 ஆயிரம் பெற்று வருகின்றனர். இத்தகையச் சூழ்நிலையில், இந்த இரண்டு  மண்டலங்களையும் தூய்மை செய்வதற்கு, ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம்  மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்து இருக்கிறது. அந்த நிறுவனம் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக அறிவிப்பு  செய்திருக்கிறது. ஏற்கனவே 1, 2, 3, 7 ஆகிய மண்டலங்களை இதே நிறுவனத்திடம்தான் 2021 இல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஒப்படைத்தார். தூய்மைப்  பணியாளர்களுக்கு, ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் ரூ.23 ஆயிரம் ஊதியமே குறைவானது. அதனை மேலும் குறைப்பது அநீதியான செயல். ஒரு வாரத்திற்கும் மேலாக ரிப்பன் கட்டடம் முன்பு, கூடாரமிட்டு இரவு, பகலாக அறப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை, தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரையில் “இசையோடு ருசியோடு விளையாடு” திருவிழா

மதுரை, ஆக.11- மதுரை மாநகராட்சி மற்றும் ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து, தமுக்கம் மைதானத்தில்  ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மாலை 4 மணி  முதல் 9 மணி வரை “இசையோடு ருசியோடு  விளையாடு – நம்ம ஊரு திருவிழா, நமக்கான பெருவிழா” நடைபெறுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் தினமும் மாலை 4 மணி முதல் பாரம்பரிய விளை யாட்டுகள், டூரிங் டாக்கிஸ், ஆயாகடை–சாயாகடை, மதுரை சிறப்பு உணவுகள், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பங்கள் ஒன்றாகக் கலந்து மகிழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கலைத்திறமை உள்ள குழந்தைகளுக் காக டேலண்ட் ஹண்டர்ஸ் அகாடமி மூலம்  மாறுவேடம், நடனம், ஓவியம், கோலம், ஒரு  நிமிட கலைத்திறன் போன்ற போட்டிகள் நடைபெறும். போட்டிகள் நடத்தவோ, அரங்குகள் அமைக்கவோ விருப்பம் உள்ளவர்கள் ஹலோ ஈவன்ட்ஸ் – 98436 15157, 98430 15157, 97909 59357, 80989 84545 ஆகிய எண்களில்  தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். பொதுமக்களுக்கு நுழைவு இலவசம்.