அரசு கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் களப்பயணம்
அறந்தாங்கி, அக். 23- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கு ஆர்வமூட்டும் விதமாக, கல்லூரி களப்பயணம் நடைபெற்றது. திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமையேற்று, தொடங்கி வைத்தார். கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கா. காளிதாஸ், ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.கணேசன், நிர்வாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் துறை சார்ந்த விளக்கவுரை ஆற்றினர். இக்களப்பயணத்தில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளிகளைச் சார்ந்த 397 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பலரும் பங்கேற்று, அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள் மற்றும் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டு பயனடைந்தனர். முன்னதாக, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை வரவேற்றார். அறந்தாங்கி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பா. ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
