tamilnadu

காவிரியிலிருந்து பிப்ரவரி இறுதி வரை தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம், டிச.27 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிற்பட்ட விவசாயம் செய்யப்பட்டுள்ளதால் காவிரி யில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பிப்ரவரி மாதம் இறுதிவரை திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. காவிரியின் கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிற்பட்ட விவசாயம் செய்யப்பட்டுள்ளதால் ஜனவரி மாத இறுதிக்குள் தண்ணீர் திறந்து விடு வதை நிறுத்தினால் விவசாயம் செய்யப் பட்ட பயிர்கள் கருகி விடும் சூழ்நிலை ஏற்படும். காவிரியின் டெல்டா மாவட்ட பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்ததன் காரணமாக விவ சாயம் செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அப்பயிர்களை அழித்து விட்டு நவம்பர் மாத இறுதியில் மீண்டும் விவசா யம் செய்துள்ளனர்.  

தலைஞாயிறு, திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர், நாகப்பட்டினம், வேதாரண் யம் உள்ளிட்ட தாலுகாக்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பிந்தைய சாகுபடி செய்துள்ளனர், தற்போது பருவமழை முற்றிலும் நின்று விட்டதால் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை கொண்டு செய்து வரு கின்றனர். டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள் பயிர்கள் நன்கு வளர்ந்து பிப்ரவரியில் அறுவடைக்கு தயாராகும். ஆனால் ஜனவரி மாத இறுதியில் காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தி விடுகின்றனர். பயிர்கள் முற்றி அறு வடைக்கு தயாராகும் போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மேட்டூரில் திறந்து விடப்படும் தண்ணீரை பிப்ரவரி மாத இறுதி வரை திறந்து விட்டால் பிந்தைய மாதத்தில் செய்யப்பட்ட விவசாயத்தை அறுவடை செய்ய ஏதுவாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர்.