கிளப் உலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்து கிளப் அணியான செல்சி சாம்பியன்
சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நிறைவு பெற்றது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து கிளப் அணியான செல்சி, பிரான்ஸ் கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதிலேயே 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி முன்னிலை பெற்றது. செல்சி அணியின் பால்மர் (22’,30’) 2 கோல்களும், பெட்ரோ (43’) ஒரு கோலும் அடித்து அசத்தினர். இரண்டாம் பாதியில் பிஎஸ்ஜி பதில் கோலடிக்க கடுமையாக போராடியது. ஆனால் செல்சி அணியின் வலுவான தடுப்பு அரணை மீறி பிஎஸ்ஜி வீரர்களால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஆட்டநேர முடிவில் செல்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக கிளப் உலகக்கோப்பையை கைப்பற்றியது. செல்சி ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. முதல் முறையாக கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி இரண்டாம் இடம் பிடித்தது.
விருதுகள்
சிறந்த வீரர் : பால்மர் (செல்சி)
அதிக கோல் அடித்தவர் : கோன்சாலோ கார்சியா
(ரியல் மாட்ரிட்) சிறந்த இளம் வீரர் : டிசையர் டூ (பிஎஸ்ஜி) சிறந்த கோல்கீப்பர் : ராபர்ட் சான்செஸ் (செல்சி)