பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
தஞ்சாவூர், செப். 25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து, போதைப் பொருள் ஒழிப்பு பற்றி சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின. கல்லூரி முதல்வர் ராணி (பொ) தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் விஷால் ஆனந்த் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராஜ்மோகன் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதி மாணவர்களிடம் பேசுகையில், 1985 ஆம் ஆண்டு இந்த போதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டப்பிரிவு 31 ஏ மரண தண்டனை வரை கொண்டுவர வழிவகை செய்தது. 1989, 2001 மற்றும் 2014-ல் இயற்றப்பட்ட உறுதி சட்டங்களின் மூலம் போதைப்பொருள் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகி நிறைய பேர் சிறு வயதிலேயே இறந்து விடுகின்றனர். போதை பொருளை ஒரு நாள் எடுத்துகொண்டால், வாழ்நாள் முழுவதுமான வாழ்க்கையே பாதித்துவிடும். போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் மீளுவதற்கு தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து விடுபடுவதற்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். மறுவாழ்வு மையங்களில் முறையான சிகிச்சை எடுத்து கொள்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரமுடியும்’’ என்றார். இதில், கல்லூரி பேராசிரியர்கள் ஜெயக்குமார், பழனிவேல், வழக்குரைஞர் சங்க தலைவர் எஸ்.வி.சீனிவாசன், செயலாளர் சிவேதி ஏ.ஆர். நடராஜன், காவல் துறையினர், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் அருண்மொழி நன்றி கூறினார்.