tamilnadu

img

முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கல்

முதியோர்களுக்கு வீடு தேடி  ரேஷன் பொருள்கள் வழங்கல் 

தாயுமானவர் திட்டத்தின் வாயிலாக

திருவாரூர், ஆக. 12-  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தாயுமானவர் திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், தெற்கு வீதி நியாய விலைக்கடை அருகில் வசிக்கும் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, நகரும் வாகனத்தின் மூலம் அத்தியாவசிய பொருள்களை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர் என். இளையராஜா ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.  திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 714 ரேசன் கடைகள் மூலம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று 363 நகரும் வாகனங்களை கொண்டு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதனால் 34,197 வயது முதிர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயனடையவுள்ளனர்.  நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  பொன்னமராவதி  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காயம்புஞ்சையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  மயிலாடுதுறை  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கீழையூர் கிராமத்தில் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  தஞ்சாவூர் பேராவூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் வீடுதேடிச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, 84 வயதைக் கடந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் தாரணி, வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ. பழனிவேலு, பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் அ.அப்துல் மஜீத், வே.கார்த்திகேயன், ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.