திமுக முப்பெரும் விழா: கரூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது செந்தில்பாலாஜி எம்எல்ஏ பேட்டி
கரூர், செப். 15- திமுக முப்பெரும் விழாவையொட்டி, கரூர் மாவட்டம் விழாக் கோலம் பூண்டுள்ளது என்றும், மேலும், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கரூரில், செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களையும் நேரில் சந்தித்து உறுப்பினர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை, கடந்த ஜூலை 1 ஆம் தேதி தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். செப் 17 இல் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மிகவும் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. திமுக முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது. முப்பெரும் விழாவை சிறப்பாக செய்திட இருக்கிறோம். அதேபோல், செப்.20 இல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் பங்கேற்ற குடும்பத்தினர் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டம், கரூர் 80 அடி சாலையில் நடக்கிறது. நடிகர் விஜய் முப்பெரும் விழா குறித்து விமர்சித்திருப்பதை நாங்கள் கண்டுகொள்ள அவசியமில்லை. பவள விழா கண்ட இயக்கம் திமுக. முப்பெரும் விழா குறித்து கட்சியினருக்கு, முதல்வர் கடிதம், மடல் எழுதுவது வாடிக்கையான ஒன்று. எனவே நாங்கள் இயக்கத்தின் பணிகளை, மக்கள் நலப்பணிகளை கண்ணும் கருத்துமாக சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிமுக உள்கட்சி பிரச்னையில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. மற்ற கட்சியினர் பற்றி நாங்கள் கருத்துக்கூற வேண்டிய அவசியமும் கிடையாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் எங்களது முழுக்கவனமும் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். மக்களுக்கான திட்டங்களை கேட்டு செயல்படுத்துவதிலேயே கவனமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார். பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் உடனிருந்தனர்.