tamilnadu

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

 ஈரோடு, மார்ச் 25- கொள்முதல் விலையை ரூ.7 ஆக உயர்த்தக் கோரி கறவை மாடுகளுடன் இம்மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி, மாநில நிர்வாகிகள் எம்.சிவாஜி, எம்.சங்கர், பி.ராமநாதன், என்.செல்லதுரை, கே.சி.ராமசாமி, ஏ.ஆர்.முத்து சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாரா யணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் 5 லட்சம் குடும்பங்கள் ஆவி னுக்கும், 10 லட்சம் குடும்பங்கள் தனியார் நிறுவனங்களுக்கும் தினசரி சுமார் 2 கோடி லிட்டர் பாலை வழங்கி வருகின்றனர். கால் நடைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய தவுடு,  புண்ணாக்கு, கலப்புத்தீவனம் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம், கறவை மாடுகளுடன் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திய பிறகு, ஆவின் நிர்வாகம் கடந்த 3.11.2022 ஆம் தேதி யன்று கொள்முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.3 வீதம் உயர்த்திக் கொடுப்பதாக தன்னிச் சையாக அறிவித்தது. இது பால் உற்பத்தி யாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது ஆவினைக்காட்டிலும் தனி யார் நிறுவனங்கள் 1 லிட்டருக்கு ரூ.5 முதல் 10 வரை கூடுதலாக விலை கொடுக்கும் நிலை யில் கடந்த  காலத்தில் தினசரி 40 லட்சம் லிட்டர் ஆவினுக்கு வந்த பால் தற்போது 26 லட்சம் லிட்டராகக் குறைந்து மாநிலம் முழுவதும் பல சங்கங்கள் மூடும் நிலைக்கு போயுள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங் களைப் பாதுகாக்கும் முறையில் ஆவின் நிர்வாகம், தமிழ்நாடு அரசு பால் கொள் முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடகா உள்ளிட்ட இதர மாநிலங்களில் ஊக்கத் தொகை வழங்குவதைப் போல் தமிழ்நாடு அரசும் 1லிட்டருக்கு ரூ.5 வீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கால்நடை தீவனங்கள் தரமாக 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பாலை எடுக்கும் போது மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். பாலின் தரத்தை நிர்ணயிக்க பால் வெப்ப நிலையை சமப்படுத்தி (எம்ஆர்எப்) முறையைக் கை விட்டு ஐஎஸ்ஐ பார்முலாவைப் பயன்படுத்த வேண்டும். ஆவினில் நடைபெறும் ஊழல் ஊதாரித்தனம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் பால் விற்பனை விலையை ரூ.3 வீதம் குறைத்ததால் ஏற்பட்ட இழப்புத் தொகை ரூ.300 கோடியை தமிழ்நாடு அரசு ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு செய்திட வேண்டும். இதற்கான செலவில் 50 விழுக்காடு ஒன்றியங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இம்மாதம் 28, 29, 30 தேதிகளில் கறவை மாடுகளுடன் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். மேலும் இதர சங்கங்களுடன் பேசி கூட்டாக பால் நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;