சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஆக. 24- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் முதலாம் மாவட்ட கோரிக்கை மாநாடு திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜம்புநாதன் வரவேற்றார். மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் நவநீதன், மாநில துணைத் தலைவர் செல்வராணி, முன்னாள் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, டி.என். ஆர்.டி.ஓ.ஏ மாநில செயலாளர் செந்தில்குமார், டி.என்.என்.எம்.இ.ஏ மாநிலச் செயலாளர் அல்போன்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டி.என்.வி. ஏ.ஓ.ஏ முன்னாள் மண்டல செயலாளர் நவமணி சுந்தரராஜ், முன்னாள் வட்டச் செயலாளர் மாணிக்கம், டி.என். ஆர்.ஓ.ஏ முன்னாள் மாவட்டத்தலைவர் அருள் ஜோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, நில அளவைத் துறையில் பணி புரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும். அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டி.என்.ஆர்.ஓ.ஏ. முன்னாள் மாநில தலைவர் சுடலையாண்டி நிறைவுரையாற்றினார். டி.என். ஆர்.ஓ மாவட்ட துணைத் தலைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.