பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு
சென்னை, ஆக. 29- மூன்றாம் கட்டமாக பூந்தமல்லி பணி மனையில் இருந்து செப்டம்பர் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்கு வரத்துதுறை அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையிலும், டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: ‘போக்குவரத்து கழக பேருந்துகளை நவீனப்படுத்தும் நோக்கில் தாழ்தள மின்சார பேருந்துகள், மின்சார குளிர்சாதன பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன’. அந்த வகையில் 625 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் வியாசர்பாடி மற்றும் பெரும்பாக்கம் பணிமனைகளிலிருந்து 225 மின்சார பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.