tamilnadu

img

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தோழர் அன்பழகன் காலமானார்

சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  தோழர் அன்பழகன் காலமானார்

திருவாரூர், அக். 13-  சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் தோழர் கே. அன்பழகன் மதுவாஞ்சேரியில் வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் காலமானார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், மருதுவாஞ்சேரி ஆற்றங்கரை தெருவில் கே.அன்பழகன்(54) வசித்து வந்தார். இவர் சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளராக மக்கள் பணியாற்றி வந்தார். திங்கட்கிழமை மதியம் 3 மணி அளவில் தனது வீட்டின அருகில் உள்ள வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இடி இடித்தது. இதில் தோழர் அன்பழகன் மீது இடி விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள நன்னிலம் தாலுகா மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து இடி தாக்கியதில் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.  இதுகுறித்து அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, பி.கந்தசாமி, எம்.சேகர் உள்ளிட்டோர் நன்னிலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, பணியில் இருந்த மருத்துவர்களை சந்தித்து பேசினார். மருத்துவர்கள் உடற்கூறாய்வுக்குப் பின் உடலை ஒப்படைப்பதாகத் தெரிவித்தனர்.  தொடர்ந்து மறைந்த தோழர் அன்பழகன் துணைவியார் விஐயாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.  இதுகுறித்து அறிந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.