பாதாளச் சாக்கடை மரணங்களைத் தடுக்க தூய்மை பொறியியல் துறை முதலமைச்சரிடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் வலியுறுத்தல்
சென்னை, அக். 16 - பாதாளச் சாக்கடை மரணங்களைத் தடுக்க புதிய இயந்திரங்கள் அவசியம் என்றும், இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தூய்மை பொறியியல் துறையை உருவாக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (அக்.16) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இச்சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி. நாகைமாலி, எம். சின்னதுரை, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். தொடரும் பாதாள சாக்கடை மரணங்கள் இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், தமிழ்நாட்டில் அவ்வப்போது பாதாளச் சாக்கடைகளில் இறங்கி வேலை செய்யும்போது மனித உயிரிழப்பு தொடர்வதாகக் குறிப்பிட்டார். இதைத் தடுக்கும் வகையில் புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அதற்கான தூய்மைப் பொறியியல் துறை ஒன்றை தனியாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார். உலகத்தின் பல்வேறு நாடுகளில் மனிதர்களைப் பயன்படுத்தாமல் கழிவுகளை அகற்றுவதற்குத் துப்புரவுப் பொறியியல் துறையின் மூலம் பல புதிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே தமிழ்நாட்டில் பாதாளச் சாக்கடை மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் வகையில் புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டதாகவும், தனியாக ஒரு துறையை உருவாக்குவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக முதலமைச்சர் தெரிவித்ததாகவும் சண்முகம் கூறினார். வடசென்னை எரி உலைத் திட்டத்திற்கு மாற்று தேவை வடசென்னையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய எரி உலைத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாகவும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் சண்முகம் தெரிவித்தார். ஏற்கெனவே பல்வேறு விதமான சுற்றுச்சூழல் பாதிப்புகளால் வடசென்னை பாதிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பதிலாக ஒரு மாற்றுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனையை முதலமைச்சரிடம் முன் வைத்ததாக கூறினார். இது சம்பந்தமாக ஒரு குழு அமைத்துப் பரிசீலிப்பதாக முதலமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாரதியார் பல்கலைக்கழக நில இழப்பீடு: ரூ.300 கோடி நிலுவை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 1978, 79 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் 925 ஏக்கர் நிலத்தைக் கொடுத்த பிறகும், ஏறத்தாழ 45 ஆண்டுகள் கடந்த இன்றுவரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தமிழ்நாடு அரசு வழங்காமல் இருப்பதாக சண்முகம் சுட்டிக்காட்டினார். இது சம்பந்தமாக 2002-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், அதன்படி சுமார் முந்நூறு கோடி ரூபாயை, தமிழ்நாடு அரசு வழங்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சனை குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், இதுகுறித்து அடுத்த வாரம் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி சட்டப்படி வழங்க வேண்டிய பணத்தை வழங்கவும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்ததாகவும் சண்முகம் கூறினார். கேபிள் டிவி நலவாரியம் செம்மையாகச் செயல்பட வேண்டும் கேபிள் டிவி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களைப் பாதிக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ‘செட் ஆப் பாக்ஸை’ மட்டும் வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்று சண்முகம் குறிப்பிட்டார். இதனால் பல்லாண்டு காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிர்ப்பந்தத்தைக் கொடுக்கக்கூடாது என்றும், கேபிள் டிவி நலவாரியத்தைச் செம்மையாகச் செயல்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். துப்புரவுப் பணித் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், துப்புரவுப் பணித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகும் என்று சண்முகம் தெரிவித்தார். இதை ஏற்கெனவே மாநில அரசு மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், தமிழ்நாடு முழுவதும் இந்தப் பணி ஒப்பந்தப் பணியாகப் பல்லாண்டு காலமாக மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநகராட்சிகள் - நகராட்சிகளில் நிரந்தரப் பணியாளர்களாக இருப்பவர்கள் அப்படியே தொடர வேண்டும் என்பதை அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டமும் நடைபெற்று வருவதாகவும் சண்முகம் குறிப்பிட்டார். இந்தத் தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்திச் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று அரசை வற்புறுத்துவதாகவும் அவர் கூறினார். ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும் சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுக்கத் தனியாகச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இந்தக் கோரிக்கையை இரா. முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகிய தலைவர்களோடு ஏற்கெனவே முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்ததாகவும் சண்முகம் தெரிவித்தார். முன்னதாக, முதல்வருடனான சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், முதல்வர் தனிச் செயலாளர்களின் முதன்மைச் செயலாளர் உமாநாத், தனிச் செயலாளர்கள் சண்முகம், அனுஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி. சுகந்தி, பொருளாளர் முருகன், வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் டி.கே. சண்முகம், ஆர். ஜெயராமன், எம்.சி.எஸ்.ஏ. வெற்றிராஜன், கே. நம்மாழ்வார், வி. ரவிக்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கானோரின் கோரிக்கையாகும் என்று குறிப்பிட்ட சண்முகம், இதை மிகப் பொறுமையாக முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும், உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததாக கூறினார்.
